கோடை காலத்தில் உண்டாகும் அதிக அளவு வெப்பம் பெரும்பாலான மக்களை உடல் மற்றும் மனதளவில் புத்துணர்ச்சியை இழக்க வைத்து சோர்வடைய செய்து விடுகிறது. அதுமட்டுமின்றி கோடை காலத்தில் மக்களுக்கு சரும நோய்கள், நீர்ச்சத்து குறைபாடு, செரிமான சிக்கல்கள், ஃபுட் பாய்சன், ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகள் என அதிகளவிலான பாதிப்புகள் உண்டாகிறது.
இதிலிருந்து ஓரளவுக்கு நாம் விடுபட வேண்டுமென்றால் நமது உணவுப் பழக்க வழக்கத்தில் மாற்றம் செய்ய வேண்டும். பருவ காலத்திற்கு ஏற்ப உடை மற்றும் பழக்க வழக்கங்களில் மாற்றம் செய்வதுபோல் உணவு பழக்கத்திலும் மாற்றம் செய்வது மிகவும் அவசியம்.
முதல் வேலையாக துரித உணவுகளுக்கு ஒரு மிகப்பெரிய பிரியாவிடை கொடுத்து அனுப்பி விடுவது நல்லது. கோடையில் நமக்கு அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்த, எளிதில் செரிமானமாக கூடிய ஆரோக்கியமான உணவுகளையே உண்ண வேண்டும்.
அவற்றில் சில முக்கிய உணவுகளை காணலாம்
தர்பூசணி
இது அதிக நீர்ச்சத்து நிறைந்த ஒரு உணவுப் பொருளாகும். நம் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் சூரிய ஒளியால் நமது சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாக்க பெரிய அளவில் உதவி புரிகிறது இந்த தர்பூசணி.
தயிர் மற்றும் மோர்
தயிர் மிக முக்கிய கோடை கால உணவு. நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசிய உணவு என்று சொல்லலாம். இது புரதம் நிறைந்தது மட்டுமின்றி இதில் உள்ள புரோபயாடிக்குகள் நமது செரிமான மண்டல அமைப்பை திறம்பட செயல்பட உதவி செய்கிறது.
இனிப்பு சோளம்
இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட், நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சுவை நிறைந்த இந்த உணவு நமது உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொண்ட பருவ காலத்தில் உதவுகிறது.
இளநீர்
தகிக்கும் வெயிலின் தாகத்தை தணிக்க உதவும் மிகவும் தூய்மையான ஒரு இயற்கை பானம் இளநீர். இளநீர் உடல் சூட்டை தணிப்பது மட்டுமின்றி பல்வேறு நலன்களை உள்ளடக்கியது. இதில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து என தாதுப்பொருட்களும் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன.
தண்ணீர்
அடுத்து மிக முக்கியமாக அனைத்து உணவுகளுக்கும் மணிமகுடமாக திகழும் தண்ணீர். அரை மணிக்கு ஒரு முறை அலாரம் வைத்தாவது ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை நம் உடலில் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க மிகவும் உதவும்..
இந்தக் வெயிலில் வறுத்த, பொரித்த, சூடான, காரம் நிறைந்த உணவுகளை தவிர்த்து விட்டு நார்ச்சத்துக்களும், நீர் சத்துக்களும் விட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை நாம் பாதுகாக்கலாம்..
கோடையிலும் குளுகுளுவென இருக்கலாம்…!