அமெரிக்காவில் ஐடி துறையில் பணிபுரிந்து கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஹைதராபாத் இளைஞர் அந்த வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பி பால் பண்ணை ஆரம்பித்த நிலையில் தற்போது அவர் தினமும் 17 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஹைதராபாத் சேர்ந்த கிஷோர் என்பவர் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். இவர் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கான்பூர் ஐஐடியில் வேதியியல் பட்டம் பெற்றார். அதன் பிறகு முதுகலை பட்டம் பெற்று பிஎச்டி பட்டம் பெற்றார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள அரிசோனாவில் உள்ள இண்டெல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பொறியாளராக பணியில் சேர்ந்தார். லட்சக்கணக்கில் கை நிறைய சம்பளம் சொந்த வீடு என்று வசதியாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்த இவர் ஒரு கட்டத்தில் தனது வாழ்க்கை போரடிக்கிறது என உணர்ந்தார்.
இதனை அடுத்து அவர் இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பி அவர் ஆரம்பித்த ஒரு சில தொழில்கள் தோல்வியில் முடிந்தாலும் மாட்டுப் பண்ணை மூலம் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. தண்ணீர் கலக்காத, ஹார்மோன்கள் இல்லாத பாலை தனது வாடிக்கையாளருக்கு அவர் விற்பனை செய்தார். மேலும் தனது பாலை பயன்படுத்தி விட்டு அதன் பிறகு திருப்தி அடைந்தால் மட்டுமே பணம் கொடுக்கலாம் என்றும் அவர் ஆரம்பத்தில் கேட்டுக்கொண்டார்.
இதனை அடுத்து அவரது பால் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. இதனை அடுத்து பால் பண்ணையில் மாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இவரது நிறுவனம் நூற்றுக்கணக்கான விவசாயிகளிடமிருந்து சுத்தமான பாலை கொள்முதல் செய்து தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வருகிறது. மேலும் இவர் நூற்றுக்கணக்கான கால்நடை பண்ணைகளை நடத்தி வருகிறார் என்றும் அதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவரது நிறுவனம் தினமும் 17 லட்சம் ரூபாய் லாபம் தருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாலும் தற்போது தான் திருப்தியான பணியை செய்வதாகவும் அமெரிக்காவில் வாங்கிய சம்பளத்தை விட பல மடங்கு வருமானம் தற்போது கிடைத்து வருவதாகவும் கிஷோர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
