ஆனந்த விகடன் பத்திரிகை அன்று முதல் இன்று வரை விரும்பிப் படிக்கும் பல்சுவை இதழ். இந்த பத்திரிகையில் இருந்து சிறந்த சினிமா கலைஞர்களுக்காக ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவது என்றால் கூடுதல் சந்தோஷம். ஒரு சினிமாவுக்கு விமர்சனம் எழுதி மார்க் போடுவாங்க. அந்த மார்க் தான் படத்தின் தரத்தைக் காட்டும்.
இதைப் பார்த்தே படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அந்த வகையில் இந்த விகடன் இதழ் தோன்றி தற்போது 95 ஆண்டுகள் ஆகிவிட்டன. எஸ்.எஸ்.வாசன் தான் இந்த இதழை 1928ல் தொடங்கினார். தொடர்ந்து அவர் தனது கடின உழைப்பால் ஜெமினி ஸ்டூடியோவையும் ஆரம்பித்து பல வெற்றிப்படங்களைத் தயாரித்தார். அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
அவ்வையார்
அந்தக்காலத்தில் பிரம்மாண்டமான படம். பக்தி காவியமாக உருவெடுத்து ரசிகர்களின் நெஞ்சில் பக்தியை வாரி இறைத்தது. கே.பி.சுந்தராம்பாள் அவ்வையாராக நடித்து நம்மை அசர வைத்திருப்பார். பாடல்கள் அனைத்தும் நம் உள்ளங்களில் தேனாறாக பாய்ந்த வண்ணம் இருக்கும்.
பக்தி பெருக்கு, பக்தி ஊற்றாகப் பிரவாகமெடுக்கும் படம். ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்து இந்த பக்தி காவியத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கினார்கள். 1953ல் வெளியானது. இந்தப் படத்தை இயக்கியவர் கொத்தமங்கலம் சுப்பு. எம்.கே.ராதா, குசலகுமாரி ஆகியோரும் நடித்துள்ளனர். எம்.டி.பார்த்தசாரதி இசை அமைத்துள்ளார்.
வஞ்சிக்கோட்டை வாலிபன்
எஸ்;.எஸ்.வாசன் இயக்கத்தில் வெளியான படம். கொத்தமங்கலம் சுப்பு படத்தின் கதையை எழுதினார். திரைக்கதையை கே.ஜே.மகாதேவன் எழுதினார். ஜெமினிகணேசன், வைஜெயந்திமாலா, பத்மினி உள்பட பலர் நடித்துள்ளனர்.
சி.ராமச்சந்திரா மற்றும் வைத்தியநாதன் இசை அமைத்துள்ளனர். படம் வெளியான ஆண்டு 1958. இந்தப்படத்தில் வைஜெயந்திமாலாவும், பத்மினியும் ஆடும் போட்டி நடனம் செம மாஸாக ரசிக்கும் வகையில் இருக்கும்.
சந்திரலேகா
1948ல் எஸ்எஸ்.வாசன் தயாரித்து இயக்கினார். எஸ்.ராஜேஸ்வர ராவ் இசை அமைத்துள்ளார். படத்தின் காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளன.
கிளைமாக்ஸ் காட்சியில் வரும் முரசு நடனம் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும். எம்.கே.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி, டி.ஏ.மதுரம், ரஞ்சன், என்.எஸ்.கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.