பாடல்
கொட்ட மேகம ழும்குழ லாளொடு கூடி னாய்எரு தேறி னாய்நுதற்
பட்ட மேபுனை வாய்இசை பாடுவ பாரிடமா
நட்ட மேநவில் வாய்மறை யோர்தில்லை நல்ல வர்பிரி யாதசிற் றம்பலம்
இட்ட மாஉறை வாய்இவை மேவிய தென்னைகொலோ.
விளக்கம்
நறுமணம் கமழும் கூந்தலை உடைய சிவகாமி அம்மையாரொடு கூடியவனே , விடையேறியவனே , நெற்றிப் பட்டம் அணிந்தவனே , பூத கணங்கள் இசை பாடுவனவாகத் திருக்கூத்தாடுவோனே , ( அறிதற்கரிய ) வேதங்களை ஓர்கின்ற தில்லையில் வாழும் நல்லவராய அந்தணர் பிரியாத திருச்சிற்றம்பலத்தே விருப்பொடு வாழ்பவனே ! இவ்வைந்து கருணைச் செயல்களையும் மேவியது யாது காரணம் பற்றியோ ? கூறியருள்