மெட்ரோ பணிகளால் நில அதிர்வு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை, மெட்ரோ அதிகாரி லிவிங்ஸ்டன் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் சென்னையின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், சென்னை அண்ணா சாலையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியானது, இதற்கு சென்னை மெட்ரோ பணிகள் காரணமா? என கேள்வி சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ முதன்மை பொது மேலாளர் லிவிங்ஸ்டனிடம் தொலைபேசி வாயிலாக கேட்டபோது சென்னையில் இரண்டாம் கட்ட பணிகளில் சுரங்கம் தோண்டும் பணி என்பது மாதவரத்தில் மட்டுமே நடைபெறுவதாகவும் அண்ணா சாலையில் எவ்வித சுரங்கம் தோண்டும் பணியிலும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மாதவரத்தில் நடைபெற்று வரும் சுரங்கம் தோண்டும் பணியின் போதும் மெட்ரோ கண்காணிப்பு குழு சுரங்கம் தோண்டும் பணியின் போது 100 மீட்டர் தொலைவுகளில் நில அதிர்வுகள் ஏற்படுகிறதா என்பது குறித்து நவீன கருவிகள் மூலம் தொடர்ந்து 24 மணிநேரமும் கண்காணித்து வருவதாகவும், தற்போது வரை மாதவரத்தில் நடைபெற்று வரும் பகுதிகளில் அது போன்று எந்தவித நில அதிர்வுகளையும் கண்டறியவில்லை எனவும் தெரிவித்துள்ளவர் உறுதியாக மெட்ரோ பணியால் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருக்காது என கூறியுள்ளார்.
இன்று காலை அண்ணாசாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனையடுத்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் பதறியடித்துக்கொண்டு வெளியே வந்தனர். இதற்கு காரணம் நில அதிர்வா? அல்லது மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியா? என்ற கேள்வி எழுந்த நிலையில் மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.