நவராத்திரியின் மங்கலமான திருநாளையொட்டி நாம் இன்றும் பலவகையான சுண்டல்கள் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பயறு இனிப்பு சுண்டல்
தேவையான பொருள்கள்:
பச்சைப் பயறு – 200 கிராம்,
வெல்லம் – 150 கிராம்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்.
எப்படி செய்வது?
பச்சைப் பயறை லேசாக வறுத்து, 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைங்க. பிறகு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கிடுங்க. வெல்லத்தைப் பொடித்து, நீரில் கரைத்து சிறிது கொதிக்க வைங்க.
அப்புறமா அதை வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சுங்க. பாகு கெட்டியானதும் வேக வைத்த பயறை தண்ணீர் வடித்து சேர்த்து, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் போட்டுக் கிளறி இறக்குங்க. அவ்ளோ தான். ருசியான பயறு இனிப்பு சுண்டல் ரெடி.
பாசிப்பருப்பு கார சுண்டல்
தேவையான பொருள்கள்:
பாசிப்பருப்பு – 200 கிராம்,
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
கடுகு, எண்ணெய், பெருங்காயத்தூள்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 2,
உப்பு – தேவையான அளவு.
எப்படி செய்து?
பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வையுங்க. பிறகு குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்குங்க. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து, வெடித்ததும் பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிங்க.
அப்புறம், வேக வைத்த பாசிப்பருப்பை தண்ணீர் வடித்து சேருங்க. பிறகு உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்குங்க.
ஃப்ரூட் சுண்டல்
தேவையான பொருள்கள்:
முளைகட்டிய சோளம்,
கொய்யாபழத் துண்டுகள்,
ஆப்பிள் துண்டுகள்,
பப்பாளிப்பழத் துண்டுகள் – தலா ஒரு கப்,
உலர் திராட்சை – 10.
எப்படி செய்வது?
முளைகட்டிய சோளத்துடன் நறுக்கிய கொய்யாப்பழத் துண்டுகள், ஆப்பிள் துண்டுகள், பப்பாளி பழத் துண்டுகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உலர் திராட்சையையும் சேர்த்துக் கலக்குங்க.
ரொம்பவே ஈசியா செய்யக்கூடிய இந்த சுண்டலில் ருசியும், சத்தும் ஏராளமாக உள்ளன.
ரங்கோலி சுண்டல்
தேவையான பொருள்கள்:
பச்சைப் பட்டாணி,
முளைகட்டிய சோளம்,
சோயா – தலா ஒரு கப்,
கேரட் துருவல் – 4 டீஸ்பூன்,
மாங்காய் (துருவியது) – 2 டீஸ்பூன்,
இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
எப்படி செய்து?
சோளம், பட்டாணி, சோயா எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து குக்கரில் வைத்து, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடுங்க. ஒரு விசில் வந்ததும் இறக்கிட்டு தண்ணீரை வடிகட்டுங்க.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, இஞ்சி விழுது, மாங்காய் துருவல், கேரட் துருவல், வேக வைத்த சோளம், பட்டாணி, சோயா சேர்த்து நல்லா கிளறி விட்டு இறக்குங்க. பிறகு நறுக்கிய கொத்தமல்லியை மேலே தூவினால்…போதும். ரங்கோலி சுண்டல் ரெடி!
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்
தேவையான பொருள்கள்:
வெள்ளை கொண்டைக்கடலை – 200 கிராம்,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு,
கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க:
தனியா, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2.
எப்படி செய்வது?
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வச்சிடுங்க. காலையில் நன்றாகக் களைந்து, குக்கரில் வைத்து தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து 2 விசில் விட்டு இறக்குங்க.
வெறும் வாணலியில் தனியா, காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பை வறுத்து மிக்ஸியில் பொடித்துககோங்க.வேக வைத்த கடலையை தண்ணீர் வடிச்சி வைங்க.. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு சேர்த்து, வெடித்ததும் வேக வைத்த கொண்டைக்கடலையைப் போட்டுக் கிளறி விடுங்க.
அதோடுஅரைத்த பொடியையும், பெருங்காயத்தூள், கறிவேப்பிலையையும் சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கிடுங்க. இப்போ சூடான சுவையான சூப்பரான சுண்டல் தயார். இதை சாப்பிட சாப்பிட ருசியாக இருக்கும்.
பெரும்பாலும் இந்த சுண்டலையே நவராத்திரியில் பொதுமக்கள் பிரியமுடன் செய்வர். அதுவும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைகளில் இந்த சுண்டல் தான் எங்கு பார்த்தாலும் இருக்கும்.