திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் உள்ள விரு வீடு,விராலிமாயன் பட்டி, நடகோட்டை உள்பட பல்வேறு கிராமங்களில் நெல்லி விவசாயம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விருவீடு பகுதி ஆறுகள் குறைவான பகுதியாகும். நான்கு கண்மாய்கள் மட்டுமே உள்ளன. கண்மாய்களுக்கு தண்ணீர் மழை பெய்தால் மட்டுமே வரும் இல்லாத பட்சத்தில் வைகை அணையில் இருந்து வரும் 58 ஆம் கால்வாய் மூலம் தண்ணீர் கிடைக்கும்.
நெல்லிக்காய் விவசாயத்துக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படாது. வறட்சியான காலங்களிலும் வறட்சியான நிலங்களிலும் நெல்லிக்காய் விவசாயம் சிறப்பாக இருக்கும். இங்கு விளையும் நெல்லிக்காய்கள், சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நெல்லிக்காய் விலை எப்போதும் ஓரளவு சீராக இருப்பதால் விவசாயிகள் நம்பிக்கையுடன் நெல்லிக்காய் விவசாயம் செய்து வருகின்றனர்.
முருங்கைக்காய், அவரைக்காய் போன்று திடீர் விலை வீழ்ச்சி இல்லாததால் தற்போது பல விவசாயிகள் முருங்கைக்காய் விவசாயத்தில் இருந்து நெல்லிக்காய் விவசாயத்துக்கு மாறி வருகின்றனர். குறைந்த தண்ணீர் போதும் என்பதாலும் அதிக அளவில் பராமரிக்க வேண்டியது இல்லை என்பதாலும் நெல்லி விவசாயம் எளிதாக நிம்மதியாக உள்ளது.
நெல்லிக்காய் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லதோ அந்த அளவுக்கு விவசாயத்திற்கும் நல்லது என்று அப்பகுதி விவசாயிகள் நம்பி நம்பிக்கையுடன் செயல்படுகின்றனர். குறிப்பாக சொல்லி அடிக்கும் நெல்லி என்றே இப்பகுதியில் குறிப்பிடுகின்றனர்.
இது குறித்து விருவீடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் கூறுகையில் கடந்த மாதம் நல்ல மழை பெய்தது ஆகையால் தற்போது நெல்லிக்காய் விவசாயம் செய்துள்ளேன். நெல்லிக்காய் விவசாயத்தில் நிச்சயம் நஷ்டம் வராது என்பதால் நிம்மதியாக இருக்கின்றேன் என்றார்