நீலகிரி மற்றும் ஆழியார் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விரைவில் கேபிள் கார் திட்டம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு சுற்றுலாத் துறை இயக்குனர் சந்திப் நந்தூரி உதகையில் தகவல்..
நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா துறைக்கு சொந்தமான படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முனை போன்ற சுற்றுலா தலங்களை தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்குப் பின் அதிகாரிகளுடன் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். இதன்பின் உதகை படகு இல்லத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பின் 3 கோடி ரூபாய் செலவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாகசம் நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்களை புதிதாக கொண்டு வரப்பட உள்ள திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி கூறுகையில், உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு சாகச விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை அறிமுகம் படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் , தேனிலவு படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்காக கொட்டகை வசதியுடன் தங்கும் விடுதி மற்றும் உணவகங்கள் ஏற்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் பிரபலமாகாத 9 இடங்கள் தேர்வு செய்து அந்த இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் ஆழியார் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மிகவும் பிரம்மாண்டமான கேபிள் கார் திட்டத்தை கொண்டுவரும் பணி நடைபெற்று வருவதாகவும் அதற்கான இரண்டாம் கட்ட ஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் கேபிள் கார் திட்டம் உதகை மற்றும் ஆழியார் பகுதியில் கொண்டு வரப்படும் என்றார்.