வினை தீர்க்கும் விநாயகர் நமக்குள்ள வினைகளை தீர்த்து வைப்பதில் வல்லவர். இவரது தனிச்சிறப்பு என்னவென்றால் மனித உடலும், விலங்கு உருவமும் கொண்டவர். ஆம். அது தான் ஆனை முகம். மனித உடல். அது சரி. அவருக்கு ஆனை முகம் வந்தது எப்படி? அது ஒரு சுவாரசியமான கதை. பார்க்கலாமா..!
முதற்கடவுளான கணபதியை பார்வதி தேவி உருவாக்கிய தினத்தையே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம். கணபதியை பார்வதிதேவியின் காப்பாளனாக உருவாக்கினாலும் இந்த உலகின் நன்மைக்காக சிவபெருமான் யானை உருவை எடுக்க வைத்தார்.

ஒருமுறை கைலாயத்தில் ஈசன் இல்லாதபோது பார்வதி தேவி நீராடச் சென்றாள். காவலுக்கு நந்திதேவன் நின்றார். அந்த சமயத்தில் சிவன் அங்கு வர உள்ளே செல்ல முயன்றார். அவரை நந்தி தேவன் தடுத்தார். அப்போது அவர் பார்வதி தேவி நீராடச் சென்றதாகவும் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் எனக்குக் கட்டளை இட்டுள்ளார் என சிவனிடம் சொன்னார்.
அதற்கு சிவன் பார்வதி தேவி என் துணைவி. இந்தக்கட்டளை என்னைத் தடுக்காது என்று கூறி சிவன் உள்ளே சென்றார். அங்கு அமர்ந்திருந்த பார்வதி தேவி சிவபெருமான் வருவதைப் பார்த்ததும் யாரையும் அனுமதிக்காதே என நந்திதேவனிடம் கூறியிருந்தேனே என்றார். அதற்கு நந்திதேவன் என் சேவகன். அதோடு நான் உன் மணாளன் என்பதால் என்னை அவர் தடுக்கவில்லை என்றார்.

நந்தியின் செயலால் கோபமடைந்த பார்வதி அவர் செய்ததில் தவறு இல்லை என்று நினைத்தார். ஆனால் பாதுகாவலனாக நிற்பவர் யாரையும் உள்ளே விடாதபடி அதிகாரியாகவும் பலசாலியாகவும் தனக்கெனப் பாதுகாவலனாகவும் இருக்க வேண்டும் என பார்வதி தேவி நினைத்தார்.
அப்படி ஒரு நாள் அந்த நினைவிலேயே நீராடச் சென்ற பார்வதி அவர் பூசிக்கொண்டிருந்த சந்தனத்தையும் மஞ்சளையும் பிடித்து ஒரு உருவம் செய்தார். அதற்கு உயிரையும் அவரே கொடுத்தார். அவரே கணபதி. அப்படி உருவான கணபதி ஒருமுறை நந்திக்குப் பதிலாகக் காவலுக்கு நின்றார்.
நந்தியிடம் கூறியதைப் போல கணபதிக்கும் கட்டளையிட்டு நீராடச் சென்றார் பார்வதி தேவி. அப்போது அங்கு வந்த சிவபெருமான் மற்றும் நந்தி உள்ளிட்ட பூதகணங்கள் உள்ளே செல்ல முயன்றன. அவர்களைத் தடுத்த கணபதி யாரையும் அனுமதிக்க முடியாது என்றார்.

நான் பார்வதி தேவியின் கணவர் என்று கூறியும் அனுமதிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ஈசன் கணங்களிடம் கூறி சிறுவனை அங்கிருந்து அகற்றுங்கள் என்று கூறிச்சென்றார். ஆனால் கணபதியோ யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அவர்களை எதிர்த்து சண்டையிட்டு விரட்டியடித்தார்.
இதை அறிந்த ஈசன் அங்கு வந்து சூலாயுதத்தால் கணபதியின் தலையைக் கொய்தார். கணபதியின் அலறல் சத்;தத்தைக் கேட்டு அங்கு வந்த பார்வதி தேவி ஈசனே இந்தப்பிள்ளை நான் உருவாக்கியவன் தான். அவரை அநியாயமாகக் கொன்று விட்டீர்களே என்றார். அவருக்கு உயிர் அளியுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு ஈசன் தேவி அனைத்தையும் நான் அறிவேன்.

உடனே பிரம்ம தேவன் கணேசனுக்கு உயிர் அளிக்கும் பொருட்டு ஒரு பிள்ளையின் தலையை எடுத்து வாருங்கள். அதைக் கணேசனுக்கு எடுத்து வைத்து உயிர் தரலாம் என்று ஆலோசனை கூறினார். அப்படியே செய்ய கணங்களுக்கு ஈசன் உத்தரவிட்டார். கணங்கள் பல இடங்களில் தேடி அலைந்து ஒரு யானைக்குட்டியின் தலையைக் கொண்டு வந்தனர். அதைப் பொருத்திய ஈசன் உயிர் அளித்தார். இப்படி யானையின் தலையைப் பொருத்தி விட்டார்களே என்ற பார்வதியின் கேள்விக்கு, ஈசன் இப்படி பதில் சொன்னார்.
கஜாமுகாசுரன் என்ற அரசன் உயிர்களைத் துன்புறுத்தி வருகின்றான். அவனை அழிக்க வேண்டும் என்றால் ஆண், பெண் சம்பந்தப்படாமல் பிறக்கும் ஒருவரால் தான் முடியும். அதோடு அவர் மனிதராகவோ பார்க்க இருக்கக்கூடாது என்று வரம் பெற்றுள்ளான். கஜமுகாசுரனை அழிப்பதற்காகவே கணேசனாக அவதரித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் அவரே முழுமுதற்கடவுளாகவும் விளங்குவார். யார் எங்கு பூஜை செய்தாலும் அது கணபதிக்குத் தான் முதல் பூஜையும், ஆரத்தியும் கிடைக்கும் என்று வரம் கொடுத்தார். இதனால் தான் நாம் கணபதிக்கு முதல் பூஜை செய்கிறோம். அவரையே முழுமுதற்கடவுளாகவும் வழிபடுகிறோம்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



