முதல் கடவுள்… மூலாதார மூர்த்தி என பெருமைக்குரியவர் விநாயகர். விநாயகர் எளிமையானவர். அதனால் இந்த விநாயகர் சதுர்த்தியை எங்கும் அதி விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.
பிரணவத்தின் சொரூபமாக உலகிற்கு வந்தவர் விநாயகப் பெருமான். பாரம்பரியமாக மண்ணால் விநாயகர் சிலையை செய்து வழிபடுகின்றனர்.
ஒரு வாழ்க்கைத் துவங்குகிறது என்றால் அது மண்ணில் துவங்கி நீரில் தான் முடிகிறது. இந்த உண்மையை உலகிற்கு உணர்த்துவதற்குத் தான் விநாயகர் சிலையை களிமண்ணில் செய்து, நீரில் கரைக்கின்றனர்.
களிமண்ணை பதப்படுத்தி விநாயகர் அச்சில் வார்த்து எடுத்து கருகமணியைக் கொண்டு கண்களை செய்து, வர்ணம் தீட்டி சின்ன குடை வைத்து எலிக்காக சின்ன களிமண் வைத்து வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். பொதுவாக இந்த நீர்நிலைகளில் மண்அரிப்பு ஏற்படுகிறது.
இதைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் களிமண்ணைக் கொண்டு போட வேண்டும். அதனால் தான் அந்தக்காலத்தில் விநாயகரைக் களிமண்ணால் செய்து 3 நாள் அல்லது 1 வாரம் கழித்து கிராமங்களில் உள்ள எல்லோரும் ஆறு மற்றும் குளங்களில் கரைத்து நீர்நிலைகளைப் பாதுகாத்து வருகின்றனர்.
நகரங்களில் உள்ளவர்களில் ஒருசிலர் வீதியில் போட்டுவிட்டு வருகின்றனர். இது தவறான விஷயம். கிணறு இருந்தால் அதில் போடுங்க. இல்லாவிட்டால் கோவில்களில் கொண்டு போய் வைத்து விடுங்கள். விநாயகர் பெருமானை வழிபட்டுவிட்டு அந்த நிறைவையும் சரியாகச் செய்யுங்கள்.
விநாயகர் சிலைக்கு அருகம்புல் சாற்றி, எருக்கம்பூ மாலை அணிவித்து சோளம், கம்பு, பழ வகைகள், பருப்பு வகைகள், பால், தேன், சர்க்கரைப் பொங்கல், கொழுக்கட்டை, மோதகம் எல்லாம் வைத்து நைவேத்தியம் செய்து வழிபடுங்கள்.
விநாயகர் சதுர்த்திக்குப் பொதுவாக சந்திரன் வரும் நேரம் விநாயகரை வழிபட்டால் அதீத பலன் கிடைக்கும். சிலை என்றால் 3 நாள் வைத்து வழிபடுங்கள். 2ம் நாள் 2 வாழைப்பழம், 3ம் நாள் கரும்பு அல்லது சர்க்கரை என ஏதாவது ஒன்றை வைத்து வழிபடலாம்.