இதோ வந்துவிட்டது வரலட்சுமி நோன்பு….! பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக உங்க வீட்டுக்கு மகாலட்சுமியை அழைத்து வாங்க…!!

இந்துக்களின் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் என்றுமே விசேஷமானவை. ரொம்ப ஆழமான கருத்துக்கள் கொண்டவை. நம் முன்னோர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வரும் பல நல்ல விஷயங்கள் இந்தப்பண்டிகைகள் மூலமாகத் தான் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது.…

varalakshmi viratham

இந்துக்களின் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் என்றுமே விசேஷமானவை. ரொம்ப ஆழமான கருத்துக்கள் கொண்டவை. நம் முன்னோர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வரும் பல நல்ல விஷயங்கள் இந்தப்பண்டிகைகள் மூலமாகத் தான் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. அந்த வகையில் விடிந்தால் வரக்கூடிய வரலட்சுமி விரதத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

இன்று வரலட்சுமி விரதம் (5.8.2022). மங்கலகரமான நாள்.  மகாலெட்சுமியே சொல்ல இந்த உலகிற்கு கிடைத்த விரதம். யார் முறையாக இருக்கிறார்களோ அவர்கள் மகாலெட்சுமிக்குப் பிரியமானவர்கள். இது வழிவழியாக செய்யக்கூடிய பூஜை. தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நல்லது.

வெள்ளிக்கிழமை காலை, மாலைகளில் செய்யலாம்.

காலை 9.15 முதல் 10.15 வரை அழைத்து பூஜை செய்யலாம். மாலை 6.30 மணி முதல் 7.30 வரை செய்யலாம். காலையில் செய்வது மிகவும் நல்லது.

கயிறு கட்டும் நேரம் காலை 10 மணி முதல் 10.30க்குள் செய்வது நல்லது. எது செய்தாலும் 10.30மணிக்குள் செய்து விட வேண்டும்.

ஒரு சிறிய கலசத்தை எடுத்து அதில் நூல் சுற்றிக்கொள்ளலாம். பச்சரிசி முக்கால் பங்கு போட வேண்டும். ஜாதிக்காய், மஞ்சள்கிழங்கு, காதோல கருகமணி, நாணயம், (தங்கக்காசு, வெள்ளிக்காசும் பயன்படுத்தலாம்), எலுமிச்சம்பழம், ஏலக்காய், கிராம்பு, பச்சைக்கற்பூரம் ஆகியவற்றை உள்ளே போட வேண்டும். எது கிடைக்கிறதோ அதைப் போடுங்க. மஞ்சள் கிழங்கு பயன்படுத்துவது முக்கியம். கலசத்துக்குள்ள தான் காதோல கருகமணி போட வேண்டும்.

வாழைப்பழம், வெத்தலப்பாக்கு வெளியில் வைங்க. தேங்காய் கலசத்தின் மேலே வைங்க. சந்தனம், குங்குமம் வைங்க. அப்புறம் பாவாடை, கம்மல், ஜிமிக்கி, மாலை போட்டு அலங்கரிங்க. ரொம்ப நல்லா அலங்காரம் பண்ணினா சர்வ அலங்கார பூஷினியாக இருக்கிற அம்பிகையை ஒரு மனைப்பலகையில் வைங்க. அழைக்கிற நேரத்திற்கு 10 நிமிடத்திற்கு முன்பு வாசலில் வைங்க.

ambal nonbu
ambal nonbu

நைவேத்தியமாக இட்லி, கொழுக்கட்டை, பாயாசம் செய்யலாம். வீட்டு வாசலில் வைத்ததும் வீட்டில் விளக்கேற்றி வைத்து நைவேத்தியமாக வெண்பொங்கல், கொழுக்கட்டை, சர்க்கரைப்பொங்கல், இட்லி எல்லாம் வைக்கலாம். இப்போ வாசலில் உள்ள அம்பாளிடம் போய் விளக்கேற்றி வைத்து மகாலெட்சுமி தாயே எங்கள் வீட்டுக்கு நீங்க எழுந்தருளனும்…நிரந்தரமா தங்கியிருக்கணும்…மன அமைதி, ஆரோக்கியம், நிம்மதியைத் தரணும், நல்ல வளத்தைத் தரணும்.

அதுக்கு நீ இந்த வீட்ல எழுந்தருளி அருள்புரியணும்…உள்ளே வாம்மா….மகாலெட்சுமி தாயேன்னு அழைக்க வேண்டும். அம்பாளைப் பாட்டு பாடி மகிழ்ச்சியாக சந்தோஷமா அழைச்சிட்டு வரணும். யார் அந்த வீட்ல மூத்த சுமங்கலியா இருக்காங்களோ அவங்களை அழைச்சிட்டு வரச்செய்யலாம். வீட்டுக்குள்ள அழைச்சிட்டு வரும்போது மனையைப் பார்த்து சாமி இருக்க வேண்டும்.

varalakshmi
varalakshmi

அம்பாளை வீட்டிற்குள் கொண்டு வந்ததும் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். முதலில் பிள்ளையாருக்கு பூஜை, குலதெய்வ வழிபாடு, கலசத்தில் எழுந்தருளியுள்ள மகாலெட்சுமிக்கு பூஜை செய்யணும். சாமந்தி, தாமரை, துளசி, வில்வம் மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது. கொழுக்கட்டை, சர்க்கரைப்பொங்கல், வாழைப்பழம், வெத்தலப்பாக்கு, 5 வகையான பழங்கள் வைத்து படையல் செய்து பூஜை செய்யலாம்.

அம்பாளுக்குப் பிரியமான ஸ்தோத்திரம் பாடி தீப தூப ஆராதனைகள் செய்யலாம். வீட்டில் பெரியவங்க யார் இருக்காங்களோ அவங்க கையால நோன்புச்சரடைக் கட்டிக்கலாம். கணவர் இருந்தால் அவங்களை வைத்துக் கட்டிக்கலாம். அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது ரொம்ப ரொம்ப நல்லது. வீட்டில் உள்ள பெரியவங்க கால்லயும் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது நல்லது. பெரியவங்களை விட்டு திருமாங்கல்யத்துலயும் குங்குமம் வைத்து விட சொல்ல வேண்டும்.

கணவருக்கு நல்ல ஆயுள் இருக்கணும் என்றும் பெண்கள் தீர்க்க சுமங்கலியா இருக்கணும்கறதுக்காகவும் தான் இந்த விரதமே இருக்காங்க. இந்த வழிபாடு எல்லாம் முடிந்ததும் நாம அழைத்துள்ள பெண்களுக்குத் தாம்பூலம் கொடுக்கலாம். உறவினர்களுக்கும் தாம்பூலம் கொடுக்கலாம்.

யாரும் வரலெட்சுமி நோன்புக்கு வந்து தாம்பூலம் வாங்கிக்கன்னு சொன்னாலும் மறுக்காம கண்டிப்பா போய் வாங்கிக்கொள்ளுங்கள். இது ரொம்ப ரொம்ப விசேஷமானது. நாம அந்த தாம்பூலத்தை வாங்கிக்கிட்டு நாம தாம்பூலம் அவங்களுக்குக் கொடுத்துட்டு பிரசாதம் எல்லாம் பகிர்ந்து கொடுத்து சாப்பிடலாம்.

இந்த பூஜை செய்ததும் நாம செய்ய வேண்டியது புனர் பூஜை. நாம அம்பாள நம்ம வீட்ல நிரந்தரமா தங்க வைக்கிறதுக்கு உண்டான பூஜை தான் இது. அதாவது மறுநாள் (சனிக்கிழமை) காலை 10.45 மணி முதல் 11.45 வரை பண்ணலாம். கலசத்தில் வைத்திருந்த அம்பாளை அப்படியே எடுத்து வந்து நம்ம வீட்டுல வைத்திருக்கக்கூடிய அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். அம்மா என்றைக்கும் இந்த வீட்ல நிரந்தரமா எழுந்தருளி அன்னலெட்சுமியாக அருள்புரியணும்னு வேண்டனும்.

அதுக்குப் பிறகு அதை அப்படியே எடுத்து வந்து வீட்ல வைத்து ஒவ்வொன்றாக அப்படியே எடுத்து விட வேண்டும். மஞ்சள் கிழங்கைப் பூசிக் குளிக்கலாம். வெத்தலப்பாக்கை நாம போட்டுக்கலாம். காதோலக்கருகமணியை எடுத்து வச்சிடுங்க. தேங்காயை இனிப்பான பொருள்கள் செய்ய மட்டும் பயன்படுத்துங்க. ஜாதிக்காய், ஏலக்காய் எல்லாவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

காசைப் பத்திரமாக பணப்பெட்டியில் வைத்து விட வேண்டும். அரிசியை அம்பாளுக்கு செய்யக்கூடிய படையலாக வைக்கலாம். பொங்கல் வைத்து நாலு பேருக்கு தானம் பண்ணலாம். வாழைப்பழம், வெத்தலப்பாக்கு வைத்து புனர் பூஜை பண்ணலாம். அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்தும் பண்ணலாம்.

கையில் கட்டிய நோன்புக்கயிற்றை விநாயகர் சதுர்த்தி வரை வைத்துக்கொள்ளலாம்.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன