மஹாளய அமாவாசை வழிபாடு!
மஹாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆகும். இதனை ‘மறந்தவர்களுக்கு மஹாளய அமாவாசை’ என்று கூறுவார்கள். இறந்தவர்களின் திதி தெரியாமல் இருக்கின்றவர்கள் இந்த மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்தால் குடும்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சனை படிப்படியாக குறைய தொடங்கும்.
வருடத்திற்கு பல அமாவாசை வந்தாலும் அதனை செய்ய மறந்தவர்கள் இந்த மகாளய அமாவாசை அன்று தவறாமல் திதி கொடுத்தால் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவார்கள்.
புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை பிரதமை நாளில் இருந்து அமாவாசை வரைக்கும் உள்ள பதினைந்து நாட்கள் மஹாளய பட்சம். இந்த நாட்களில் முன்னோர்களின் ஆன்மாக்கள் தங்கள் உலகத்தில் இருந்து கடவுளிடம் அனுமதி வாங்கி கொண்டு இந்த பூவுலகுக்கு வருவார்களாம்.
கருட புராணத்தில் இந்த மஹாளய அமாவாசை பற்றி கூறப்பட்டு இருக்கின்றது. அன்றைய தினத்தில் இறந்தவர்களுக்கு கொடுக்கின்ற திதி, படையல்கள், பூஜைகளை பார்த்து மகிழ்ந்து நமக்கு ஆசி வழங்கி செல்வார்கள்.
மஹாளய அமாவாசை வழிபாட்டில் சைவ உணவைத்தான் படைக்க வேண்டும். அவரவர்களின் குலவழக்கப் படி பூஜைகளை மேற்கொள்ளலாம். அவ்வாறு தெரியாமல் இருக்கின்றவர்கள் இங்கே கூறப்படும் வழிமுறைகளை பின்பற்றுங்கள். அதிகாலை எழுந்து நீராடி, வீட்டை சுத்தம் செய்து, இறந்தவர்களின் புகைப்படத்தை நடுவீட்டில் வைத்து பூமாலை அல்லது பூ ஏதேனும் வைத்து விடுங்கள். அந்த படத்தில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள். அவரவர்களின் வசதிக்கேற்ப படையல்கள் போடலாம். முக்கியமாக எள்ளு பித்ருக்களுக்கு பிரியமானவை ஆகும். பருப்பு சாதம் அல்லது தயிர் சாதத்தில் சிறிது எள்ளை கலந்து காக்கைக்கு படைத்து விடுங்கள்.
வீட்டில் பிரண்டை இருந்தால் அதுவும் சமைத்து பித்ருக்களுக்கு படைக்கலாம். முளைத்த எள்ளு, வெள்ளை எள்ளு தவிர்த்திடுங்கள். கருப்பு எள்ளு தான் உகந்தது. முடிந்த அளவிற்கு இரும்பு பாத்திரம், எவர்சில்வர், பிளாஸ்டிக், கண்ணாடி, பீங்கான் பொருட்களை தவிர்த்து விடுங்கள். முடிந்த அளவிற்கு வாழையிலையில் படையலை படையுங்கள்.
பிண்டதானம் செய்கிறவர்கள் அதாவது வெள்ளை சாதத்தை வைக்கும் சமயத்தில் கண்டிப்பாக சிறிது எள்ளு கலந்து வைக்க வேண்டும். பிண்டமாக சாதத்தை வைத்தததும், தில தர்பணத்தை அதில் சேர்த்து செய்ய சொல்வார்கள். இதனை செய்து வந்தால் பித்ருக்களுக்கு திருப்தி தரும்.
சூரியனை பார்த்தபடி நின்று சிறிது நீரையும், கொஞ்சம் எள்ளும் தர்பணமாக விட்டு முன்னோர்களை மனதார வணங்கி வரலாம். வீட்டில் ஆண்கள் இருந்தால் இதனை செய்யலாம். இல்லாதவர்கள் தங்களது முன்னோர்களை மனதார நினைத்து இதனை செய்து வந்தால் முன்னோர்களின் சாபம் நீங்கும்.
மஹாளய பட்சம் நாட்களில் பித்ருக்கள் தங்களது பிள்ளைகள், வாரிசுகளை பார்க்க இந்த பூவுலகிற்கு சூட்சம உடலோடு வரும் அனுமதியை பெறுவார்கள். இந்த பதினைந்து நாட்களில் அவர்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் சிரார்த்தம் கண்டிப்பாக செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் தீட்டுகள் எதாவது ஏற்பட்டுவிட்டால் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திர நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தர்ப்பணம் என்பது முன்னோர்களை திருப்தி படுத்துவது ஆகும். அன்றைய தினத்தில் பலரும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால், உங்களது முன்னோர்களின் பெயர், கோத்திரம் சொல்லி செய்வது சிறப்பாகும். பொதுவாகவே பிறப்புக்கு பெயர், நட்சத்திரமும், இறந்தவர்களுக்கு திதியும் கணக்கிடப்பட வேண்டும் என்று சாஸ்திர நூல்களில் சொல்லப்படுகின்றது. மறைந்த முன்னோர்கள் எந்த நாளில் இறப்பு, எந்த திதி, எந்த தமிழ் மாதம், எந்த பட்சத்தில் திதி வருகின்றதோ அன்றைய தினத்தில் செய்ய வேண்டும். தெரியாதவர்கள் மஹாளய அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களின் பெயர், கோத்திரம் சொல்லி தர்ப்பணம் செய்தால் போதுமானது.