இது இயந்திரமயமான வாழ்க்கை. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை ஏதாவது ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் அவசர யுகத்தில் சமையலுக்கு என்று நேரம் ஒதுக்குவதே பெரும்பாடாக உள்ளது.
அதனால் எதை எளிதாக செய்ய முடியுமோ அதை செய்து விட்டு வேலைக்குப் புறப்பட்டு விடுகின்றனர். அதே நேரம் ருசியாகவும் இருக்க வேண்டும் அல்லவா? அதற்காக நாம் இன்று எளிதில் செய்யக்கூடிய சுவையான தக்காளி தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உரப்பு, கார்ப்பு என அறுசுவை நிறைந்தது இந்த தொக்கு. காலை டிபனான இட்லி, தோசைக்கு சிறந்த சைடிஷ் இது. எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..?
தேவையான பொருள்கள்
பாமாயில் – 3 கரண்டி
தக்காளி – 6 (நறுக்கியது)
புளி – எலுமிச்சை அளவு
வெல்லம் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
மஞ்சள் – அரை தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
தாளிசத்துக்கு
எண்ணை – 2 தேக்கரண்டி
கடுகு – சிறிதளவு
சோம்புத்தூள் – கால் கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
எப்படி செய்வது?
முதலில் அடுப்பைப் பற்ற வைத்து வாணலியில் பாமாயில் ஊற்றிக் காய விடுங்க. நறுக்கிய தக்காளிப்பழத்தை எடுத்து நன்றாக வதக்குங்கள்.
தொடர்ந்து புளி, வெல்லம் சேர்த்து கலந்து கால் மணி நேரம் வேக விடுங்க. தொடர்ந்து நல்லா வெந்தவுடன் அதனுடன் பொடித்த வெந்தயம், கடுகு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து விடுங்க.
இப்போது மசாலாவை நல்லா கலந்து எண்ணை பிரிந்து வரும் வரை நன்கு கலக்குங்க. வாணலியில் எண்ணையை ஊற்றி காய விடுங்க. கடுகு, சோம்புத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்க.
இந்த தாளிசத்தை தக்காளி மசாலா கலவையுடன் சேர்த்து விடுங்க. அவ்ளோ தான் சுவையான தக்காளி தொக்கு இப்போது தயார்.