பிள்ளைகள் மீது அதிக கவனமும் ஆபத்து தான்… நீங்கள் ஹெலிகாப்டர் பெற்றோரா?

By Amaravathi

Published:

பாசமான பெற்றோர், ப்ரெண்ட்லியான பெற்றோர் என நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் இது என்னடா புதிதாக “ஹெலிகாப்டர் பெற்றோர்” என்கிறார்கள் என குழப்பமாக இருக்கிறதா?. இதுவும் பிள்ளைகள் மீது அளவு கடந்த பாசத்தை பொழியும் பெற்றோரின் ஒருவகை தான், இருந்தாலும் இதனால் பிள்ளைகளுக்கு உளவியல் ரீதியான பிரச்சனைகள் அதிகரிக்க கூடும்.

ஆம், பிள்ளைகள் படிப்பு மற்றும் விளையாட்டில் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணுவது அனைத்து பெற்றோர்களின் இயல்பான ஆசை. ஆனால் ஹெலிகாப்டர் பெற்றோர்களை பெறுத்தவரை பிள்ளைகளை ஜெயிக்க வைக்க உடனிருந்து உதவுவார்கள். குழந்தையின் ஒவ்வொரு விஷயத்திலும் தேவைக்கு அதிகமாகவே உதவி செய்து, அவர்களை சுயமாக எதுவும் செய்ய விடமாட்டார்கள். அதிகமான அக்கறை, அதிகமான கவலை, அதிகமான கண்காணிப்பு கொண்டவர்கள் ஹெலிகாப்டர் பெற்றோர் என அழைக்கப்படுகிறார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நம்ம ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு அப்பாவாக வரும் பிரகாஷ் ராஜ் மாதிரி என வைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் ஹெலிகாப்டர் பெற்றோர் என்பதற்கான அறிகுறிகள்:

நீங்கள் பெற்றோராக மாறியதும், உங்கள் குழந்தையை சரியாக வளர்ப்பது, ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுக்காக முன்னுரிமை கொடுப்பதில் மட்டுமே நீங்கள் அக்கறை செலுத்த வேண்டும். மாறாக உங்கள் உலகம் குழந்தையை சுற்றி மட்டுமே சுழல்வதும், அவர்களைத் தவிர வேறு எதுவுமே முக்கியமில்லை என நினைப்பதும் நீங்கள் ஒரு ஹெலிகாப்டர் பெற்றோர் என்பதை உறுதிபடுத்தும்.

உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை எக்காரணம் கொண்டு நீங்கள் வாழ முயற்சிக்காதீர்கள். வார்த்தைகள் மூலமாக கூட நீங்கள் அவர்களின் முடிவுகளை, அவர்களின் கனவுகள் மற்றும் மிக முக்கியமாக, அவர்களின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளவில்லை என்பதை உறுதி செய்யுங்கள்.

குழந்தைகளின் போர்க்களத்தில் உங்களுக்கு வேலையில்லை:

‘என் பிள்ளைக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன்’ என்பது எல்லா வகையிலும் சிறப்பானது அல்ல. குழந்தைகளுக்காக நீங்கள் நிற்பதும், அவர்களுக்காக அவர்களே போராடுவது என்பதும் முற்றிலும் மாறுபட்ட விஷயம். குழந்தைகளின் பிரச்சனைகளை அவர்களே கையாள விடாமல், அனைத்தையும் பெற்றோர்களே முடிவெடுக்கிறார்கள். இது குழந்தைகள் பெரியவர்களாக வளரும் போது, ஒரு பிரச்சனையில் சிக்கினால் எப்படி அதனை கையாள வேண்டும், சவாலை சமாளித்து எப்படி முன்னேற வேண்டும் போன்ற விஷயங்களில் செயல்படத் தெரியாமல் பின்வாங்க வைக்கிறது.

எனவே உங்களுக்கு விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் குழந்தைகளின் பிரச்சனைகளை அவர்களே கையாள விடுவது நல்லது. பெற்றோராக அதற்கான அட்வைஸ் மற்றும் வழிகாட்டுதல்களை மட்டும் கொடுத்தால் போதும்.

பிள்ளைகளின் வீட்டுப் பாடங்கள், வேலைகளை நீங்களே செய்வது?

பெற்றோராக பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது என்பது மிகவும் முக்கியமான கடமையாக இருக்கலாம், ஆனால் அவர்கள் அதில் சிறப்பானவர்களாக காட்ட வேண்டும் என்பதற்காக நீங்களே வீட்டுப் பாடங்களை செய்து கொடுக்க கூடாது.

பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கஷ்டப்படுவதைப் பார்க்க முடியாது, அதனால் தான் அவர்கள் தங்கள் வேலையை முடிப்பார்கள். குறிப்பிட்ட தருணத்தில் அது சரியாகத் தோன்றினாலும், பிற்காலத்தில் அது அவர்களைப் பாதிக்கும். அவர்கள் படிப்பில் பின்தங்குவது மட்டுமின்றி, சுய கற்றல் மூலம் கிடைக்கும் அறிவையும் இழக்கிறார்கள். எனவே தான் அவர்களது வீட்டுப்பாடம் மற்றும் வீட்டில் உள்ள வேலைகளை அவர்களையே செய்ய வைப்பது நல்லது.

பிள்ளைகளின் ஆசிரியர்களுக்கு படம் எடுப்பது:

ஹெலிகாப்டர் பெற்றோர் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று, உங்கள் பிள்ளையின் ஆசிரியர்களுக்கு அவர்களின் வேலையை எப்படிச் செய்வது என்று கற்பிப்பது. உங்கள் பிள்ளைகள் என்ன மாதிரியான தவறுகளை செய்கிறார்கள், அதற்கு அவர்களுடைய ஆசிரியர் அல்லது விளையாட்டு பயிற்சியாளர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என கிளாஸ் எடுக்க கூடாது. பிள்ளைகளிடம் கேள்வி கேட்டு அதில் இருந்து கிடைக்கும் பதிலை வைத்து ஆசிரியர்கள் அவர்களைப் பற்றி தீர்மானிக்க நீங்கள் இடமளிக்க வேண்டும்.

தோல்வியில் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுவது:

பிள்ளைகளும் ஒருநாள் வளர்ந்து பெரியவர்கள் ஆகக்கூடியவர்களே. எனவே அவர்கள் வருங்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் ஏராளம். எனவே குழந்தைகள் ஒரு பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனித்துக் கொண்டால் மட்டுமே போதும். அதில் உதவுகிறேன் என சொல்லி தோல்வியில் இருந்து அவர்களை காப்பாற்றுவது, உங்கள் பிள்ளைகள் கடினமான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறனை சேதப்படுத்துவதோடு, தொடர் தோல்விகளுக்கும் வழிவகுக்கும்.

குழந்தைகளின் நண்பர்களை முடிவு செய்வது:

ஹெலிகாப்டர் பெற்றோர்கள் செய்யும் மற்றொரு தவறு தனது பிள்ளைகளுக்கான நண்பர்களை கூட அவர்களே முடிவு செய்வது. குழந்தைகளைப் பொறுத்தவரை தனது நண்பர்கள் யார் என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அப்போது தான் பிற்காலத்தில் சூழ்ச்சி, வஞ்சம், துரோகம், போலியான நட்பு ஆகியவற்றை அவர்களால் அடையாளம் காணவும், சமாளித்து கரையேறவும் முடியும்.

Tags: Children

Leave a Comment