பெரும்பாலான வீடுகளில் எப்போது பார்த்தாலும் கணவன், மனைவிக்குள் ஒரே சண்டையாகத் தான் இருக்கும். இருவருக்குமே சரியான புரிதல் இல்லாமல் தான் இத்தகைய சண்டைகள் நடந்து வருகின்றன. இதில் படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடே இல்லாமல் போய்விட்டது என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.
இன்னும் சொல்லப்போனால், படிக்காதவர்களை விட படித்தவர்களின் வீடுகளில் தான் சண்டை அனல் பறக்கும். இந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டு.
இதற்காகவா நான் கல்யாணம் முடித்தேன் என்று மனதளவில் இருவருமே வருந்தி நாள்களைக் கடத்தக்கூடாது. அது உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இந்த சிக்கலில் இருந்து விடுபட என்ன தான் வழி என்று பார்க்கலாமா..!
முதலில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள்
கணவன் மனைவி இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனம் விட்டுப் பேசுங்கள். அப்போது தான் இவர் யார் எப்படிப்பட்டவர் என்பது இருவருக்கும் தெரிய வரும்.
அதன் மூலம் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழலாம். நீ பெரியர், நான் தான் பெரியவர் என்று ஒருவருக்கொருவர் போட்டி போடாதீர்கள். இதுதான் பிரச்சனைகளுக்கு மூலகாரணம்.
சிறிய சிறிய பிரச்சனைகளை பூதாகரமாக்காதீர்
பெரும்பாலான வீடுகளில் சண்டை வர காரணமே இதுதான். சின்ன பிரச்சனை தான் அங்கு இருக்கும். உதாரணத்திற்கு காபியில் சர்க்கரை கொஞ்சம் கம்மியாக இருக்கும்.
கணவன் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்ததும் குடித்துப் பார்த்து அலுவலகத்தில் உள்ள டென்ஷனில் காபியைக் குறை சொல்லி டம்பளரைத் தூக்கி வீசி விடக்கூடாது. அதைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
எந்த நிலையிலும் மனம் தளராதீர்
இருவருக்குள்ளும் மனஸ்தாபம், கருத்துவேறுபாடு ஏற்படுவது சகஜம் தான். அதனால் நமக்கு வந்து வாய்த்ததே சரியில்லை என புலம்பித் தள்ளாதீர். எத்தகைய சோகமான சம்பவங்கள் நடந்தாலும் மனம் தளரக்கூடாது. அடுத்த அடியை துணிந்து முன்னோக்கி எடுத்து வைக்க வேண்டும்.
மனம் தளர்ந்தால் அடுத்து என்ன காரியம் செய்தாலும் அது சரியாக முடியாது. எப்போதும் நேர்மறையான சிந்தனைகளுடன் அடுத்து நாம் செய்ய வேண்டிய வேலைகளின் மீது கவனம் செலுத்துங்கள்.
விட்டுக்கொடுங்கள்… கெட்டுப்போக மாட்டீர்
விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை என்பர். நாம் ஆண் மகன். ஒரு பெண்ணிடம் அடிபணிந்து போவதா என்ற ஆணாதிக்கம் இருந்தால் குடும்பத்தில் சண்டை ஒருபோதும் ஓயவே ஓயாது. அந்தக்காலம் எல்லாம் மலையேறி போய்விட்டது.
இக்காலகட்டத்தில் இருவருக்கும் சமமான திறமைகள், வேலைவாய்ப்புகள் என வந்து விட்டன. அதனால் முடிந்தளவு நாம் தான் விட்டுக்கொடுத்துப் போகவேண்டும். இதனால் நம் குடும்ப நலன் பாதுகாக்கப்படும் என்றால் அதைச் செய்வதில் தவறேதுமில்லை.
அதே போல் பெண்களும் தேவையான காலகட்டத்தில் கணவனிடம் அனுசரித்துப் போக வேண்டும். எல்லாவற்றிலும் கணவர் தான் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எண்ணக்கூடாது.
எதிர்பாராததைச் செய்யுங்கள்
உங்கள் கணவருக்கு எந்த உணவு பிடிக்குமோ அதை அடிக்கடி செய்து கொடுங்கள். அவருக்கு பிடித்தமான டிரஸ் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அந்த நேரத்தில் அவரிடம் இது தான் உங்களுக்கு ஏற்ற கலர் என்று நம்பிக்கையை ஏற்படுத்தி கடைக்குச் செல்லும்போது கூடவே சென்று நீங்கள் ஸ்மார்ட்டான டிரஸை தேர்ந்தெடுத்துக் கொடுங்கள்.
உங்கள் கணவரின் உடல் நலனில் அவ்வப்போது அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். அவருடைய பிறந்தநாள், திருமண நாள்களில் ஒருவருக்கொருவர் கிப்ட் எடுத்துக் கொடுங்கள். திடீரென விடுமுறையின் போது பிளான் போடாமல் குடும்பத்துடன் ஒரு பிக்னிக் போய் வாருங்கள்.