2026 ஆம் ஆண்டிற்குள் ஏதாவது ஒரு ஆண்டில் புவியின் சராசரி வெப்பநிலை தற்காலிகமாக 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு மேல் உயர்வதற்கு 48 விழுக்காடு வாய்ப்பு இருப்பதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
Global Annual to Decadal Climate Update எனும் பெயரில் அடுத்த ஐந்து ஆண்டுகள் உலக வானிலையின் முன்கணிப்பை உலக வானிலை அமைப்பு மே 9ம் தேதி வெளியிட்டுள்ளது. புவி வெப்பநிலையை தொழிற்புரட்சிக்கு முந்தைய அளவைவிட (1850-1900 வரையிலான சராசரி புவி வெப்பநிலை) 1/5° செல்சியஸ் அளவிற்கு உயர விடாமல் தடுப்பதற்காகத்தான் பாரிஸ் ஒப்பந்தத்தில் உலக நாடுகள் கையெழுத்திட்டன. ஆனால், இந்த 1.5° செல்சியஸ் உயர்வை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் வரும் ஏதாவது ஒரு ஆண்டில் தற்காலிகமாக புவி எட்டிவிடும் என உலக வானிலை அமைப்பு தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது. இந்த அளவிற்கு வெப்பநிலை உயர்ந்தால் தற்போது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் உலகம் சந்தித்து வரும் தீவிர காலநிலை நிகழ்வுகளின் எண்ணிக்கையும் தீவிரமும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மேலும் இதுவரை பதிவானதிலேயே அதிக வெப்பநிலை பதிவான ஆண்டாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு ஆண்டு இருப்பதற்கு 93% வாய்ப்பிருப்பதாகவும் உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது.(2016ம் ஆண்டுதான் வரலாற்றில் அதிக வெப்பமான ஆண்டாகும்)
பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தான 2015ம் ஆண்டில் புவி வெப்பநிலை தற்காலிகமாக 1.5° செல்சியஸ் அளவை எட்டுவதற்கான வாய்ப்பானது பூஜ்ஜியம் விழுக்காடாக இருந்தது. 2017-2021 காலத்தில் இந்த வாய்ப்பானது 10 விழுக்காடாக இருந்த நிலையில் 2022-2026 காலத்தில் இந்த வாய்ப்பானது 50 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
“நாம் தொடர்ந்து பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றிக் கொண்டிருக்கும் வரையில் புவியின் சராசரி வெப்பநிலை உயர்ந்து கொண்டே இருக்கும். இதனுடன் சேர்ந்து நம் கடல்களும் தொடர்ந்து வெப்பமடைந்து அமிலமாகிக் கொண்டிருக்கும், பனிப் பாறைகளும், படுகைகளும் உருகிக் கொண்டேயிருக்கும், கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டும் புவியின் வானிலையானது மிகத் தீவிரமாக மாறுபாடு அடையும், ஆர்டிக் பகுதியில் வெப்பநிலை உயரும் அந்த வெப்பநிலை உயர்வானது புவியில் வாழும் அனைவரையும் பாதிக்கும்” என உலக வானிலை அமைப்பு தலைவர் பெத்தாரி தாலஸ் தெரிவித்துள்ளார்.