கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமானதைத் தொடர்ந்து இந்தியாவில் 4 வது கட்டமாக ஊரடங்கானது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2 மாதங்கள் வேலைக்குச் செல்ல முடியாததால் உணவிற்கு வழியின்றி தவிக்கும் மக்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து திரைப்பிரபலங்கள் பலரும் உதவி வருகின்றனர்.
அந்தவகையில் நடிகை நித்யா மேனன் புதிய திட்டம் ஒன்றின்மூலம் பணம் திரட்ட முடிவு செய்துள்ளார். அதாவது அவர் பேஷன் நிகழ்ச்சி மற்றும் படங்களில் அவர் அணிந்திருந்த ஆடைகளை ஏலம் விட்டு, அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ முடிவு செய்துள்ளார்.
அதுகுறித்து நித்யா மேனன் கூறியதாவது, “நான் பேஷன் ஷோ மற்றும் சினிமாக்களில் அணிந்த உடைகளை ஏலம் விட முடிவு செய்துள்ளேன், இப்போது இருக்கும் சூழலில் ஏழை, எளிய மக்களுக்கு எப்படியாவது கை கொடுத்தே ஆக வேண்டும்.
இதன்மூலம் கிடைக்கும் பணத்தினை ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் அறக்கட்டளைக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளேன், உடைகள் குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்ய நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.