இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்டமாக மே 4 ஆம் தேதியில் இருந்து மே 18 வரையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் சினிமாப் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாததால், சினிமாப் படப்பிடிப்புகள் உட்பட மிக முக்கிய தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சினிமாப் படப்பிடிப்பு துவங்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது குறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், “படப் பிடிப்புகள் நடைபெற்று 2 மாதங்கள் ஆகவுள்ள நிலையில், இதுவரை 200 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 500 கோடி ரூபாய் வரை முடங்கிக் கிடக்கின்றது.
இதனால் தயாரிப்பாளர்கள் முதல் சினிமாவில் பணிபுரியும் பலதொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்க முடியவில்லை என்றாலும், எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை, ஒலிக்கலவை, டி.ஐ, போன்ற பணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
கொரோனாத் தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளி கடைபிடித்தல், முக கவசம் மற்றும் சானிடைசர் உபயோகித்துதல் என தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.