இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இலங்கை சுற்றுலாவை பெரும் பொருளாதார ஆதாரமாகக் கொண்டு விளங்கும் நாடுகளில் ஒன்றாகும். ஒருபுறம் கடல் சார்ந்த வியாபாரம் மற்றொருபுறம் சுற்றுலா என்று இருந்து வருகின்றது.
கொரோனா ஊரடங்கிற்கு முன்னர் வெளிநாட்டுப் பயணிகள் அதிக அளவில் சுற்றுலா சென்ற நாடுகளில் ஒன்றான இலங்கை அரசு அதிக அளவிலான வருமானத்தை சுற்றுலாத் துறையின் மூலம் ஈட்டியது.
தற்போது கொரோனா ஊரடங்குத் தளர்விற்குப் பின்னர் மீண்டும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சில திட்டங்களை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதன் முன்னோட்டமாக தற்போது பாரடைஸ் விசா என்ற பெயரில் இலங்கையில் புதிய விசாவினை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பினை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவித்து மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், “வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் உள்ள சிறிய விமான நிலையங்களுக்குச் செல்வதை விரும்புகின்றனர். அதனைக் கருத்தில் கொண்டே பாரடைஸ் விசா அறிமுகம் செய்யப்பட உள்ளது” என்று கூறியுள்ளார்.