ரஷ்யா- உக்ரைன் இடையேயான போரானது உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயமாக உள்ளது. ரஷ்யா உக்ரைனை கடந்த சில நாட்களாக வான் வழி, தரை வழி மற்றும் நீர் வழி என மூன்று வழிகளிலும் போரைத் துவக்கி கடுமையாகத் தாக்க உலகின் பல நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தன.
உக்ரைன் போரில் ராணுவ வீரர்கள் பல ஆயிரம் பேர் உயிர் இழந்தனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து உக்ரைன் சென்ற கல்லூரி மாணவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பினர்.
அந்தவகையில் உக்ரைனில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களை தக்க பாதுகாப்பு வசதிகளுடன் இந்திய அரசு மீட்டது. மீட்கப்பட்ட 20 ஆயிரம் மாணவர்களின் கல்வி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தும் இருந்தது.
தற்போது ரஷ்ய அரசு உக்ரைனில் படித்து நாடு திரும்பிய வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் அனைவருக்கும் கூடுதல் கட்டணம் இல்லாமலும், நுழைவு தேர்வு இல்லாமலும் சேர்த்துக் கொள்ள முன் வந்துள்ளது.
மேலும் ரஷ்ய கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்க்கும் பணியைத் துவக்கச் செய்துள்ளது. இந்த செய்தி இந்தியா உட்பட வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.