2005 ஆம் ஆண்டு தனது சினிமாப் பயணத்தினைத் துவக்கிய தமன்னா, தற்போது 15 ஆண்டுகள் ஆகியும் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார்.
கொரோனா பாதிப்பால் சினிமா உட்பட பல தொழில்கள் நடைபெறவில்லை, இதனால் சினிமாத் துறையில் உள்ள நலிந்த கலைஞர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் பொருட்டு திரையுலகத்தினர் தங்களால் இயன்ற பொருள் உதவியினை செய்து வருகின்றனர்.
அதுகுறித்து ட்விட்டரில் தமன்னா கூறியுள்ளதாவது, “நாம் இப்போதைய சூழ்நிலையில் விலங்குகளைப்போல் கூண்டுக்குள் அடைந்து கிடக்கிறோம். கொரோனா வைரஸைக் கட்டுக்குள் வைக்க நமக்கு இருக்கும் ஒரே வழி ஊரடங்கு மட்டுமேதான். இதுகுறித்த விழிப்புணர்வு இல்லையெனில் நாம் பேரழிவினைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவோம்.
சமூக விலகல் என்ற விஷயத்தினைக் கடைபிடிக்கும் பொருட்டு, நாட்டில் எந்தவொரு சிறுதொழில்கள் முதல் பெரிய தொழில்கள் வரை எதுவும் நடைபெறவில்லை. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரிய வீழ்ச்சியினை சந்தித்துள்ளது.
இந்த மோசமான சூழ்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் யாரும் பசியுடன் தூங்க செல்லக்கூடாது என்பதை மனதில் கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறேன்.
தயவுகூர்ந்து ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பொருட்களை உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு கொடுத்து உதவுங்கள். சுயநலத்தினை விடுத்து மற்றவர்கள் குறித்தும் நினைத்து, நாம் உதவி செய்து கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தினை தொடர்வோம்” என்று கூறியுள்ளார்.