அழகினைத் தாண்டிய நடிப்பினால் சினிமாவில் பெண்கள் நிலைத்து நிற்க முடியும் என்று காட்டியவர் ஜோதிகா, இவர் கொஞ்சம் கூடுதலாகவே நடிக்கிறார் என்று ஒருபுறம் ரசிகர்கள் கேலி செய்தாலும், இவரது ஓவர் ஆக்டிங்கிற்கு என்று ரசிகர்கள் இருந்துகொண்டே வருகின்றனர்.
1999 ஆம் ஆண்டு வாலி படத்தின்மூலம் அறிமுகமான இவர், 2007 ஆம் ஆண்டுவரை கொடிகட்டிப் பறந்தார். 2007 ஆம் ஆண்டு இவர் நடித்த மொழி திரைப்படத்திற்கு பல விருதுகளைப் பெற்ற இவர், 2006 ஆம் ஆண்டு சூர்யாவினைத் திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் இருந்து விலகினார்.
அதன்பின்னர் 8 ஆண்டுகள் கழித்து 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே படத்தின்மூலம் கம்பேக் கொடுத்தார். கம்பேக் கொடுத்தபின்னர் இவர், அதிக அளவில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஜோதிகா சூர்யா தயாரிப்பில் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஊரடங்கினால் திரைப்பட்த்தினை திரையரங்கில் வெளியிட முடியாத நிலையில் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தினை நேரடியாக டிஜிட்டல் பிளாட்ஃபார்மான அமேசான் பிரைமில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம், ”’பொன்மகள் வந்தாள்’ டிஜிட்டல் ஃபிளாட்பார்மில் வெளியானால், 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிட மாட்டோம்.” என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.