தமிழில் ஓக்கே காதல் கண்மணி படத்தின் மூலம் அனைவரும் அறியப்பட்டவர் துல்கர் சல்மான். மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான இவர் புகழ்பெற்ற மலையாள ஹீரோவாக விளங்குபவர்.
இந்த நிலையில் சமீபத்தில் அனுராப் சத்யன் இயக்கத்தில் வந்த வரனே அவஷ்யமுண்டு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என பெயர் சூட்டப்பட்டிருந்ததாம்.
இதனால் வெகுண்டெழுந்த சில தமிழ் அமைப்புகள் சமூக வலைதளங்களில் இப்படத்துக்கெதிராகவும் படக்கலைஞர்களுக்கு எதிராகவும் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டனர்.
இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் தனது ட்விட்டர் பதிவில் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது தரப்பு நியாயத்தை விளக்கி, அதற்கு மன்னிப்பும் கோரியிருந்தார் துல்கர்.
இது தொடர்பாக ‘ஓகே கண்மணி’ படத்தில் துல்கருடன் நடித்த விஜே ரம்யா கூறியிருப்பதாவது,
“துல்கருக்கு நம் மீது பெரிய மரியாதையும், தான் சென்னைவாசி என்ற பிணைப்பும் உள்ளது.
அவரைப் பல நாட்களாகத் தெரியும் என்பதால் என்னால் கண்டிப்பாக இதைச் சொல்ல முடியும். நாம் (இப்படிப் பேசுவதை விட) மென்மையானவர்கள். எல்லாவற்றையும் அப்படியே புரிந்துகொள்ள வேண்டியதில்லை. தயவுசெய்து தேவையில்லாத வெறுப்பைப் பரப்புவதை நிறுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.