உலகம் முழுவதிலும் தலைவிரித்தாடும் கொரோனா சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளை வெச்சு செய்து விட்டது. இந்த கொரோனாவானது இந்தியாவினையும் விட்ட பாடில்லை.
கொரோனாவானது பொதுமக்களைத் தாண்டி மருத்துவர்களையும் தாக்கி வருகின்றது, அந்த வகையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை செய்த சென்னையை சேர்ந்த மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் நேற்று மாலை உயிர் இழந்தார்.
அதன்பின்னர் அவரது உடலை அடக்கம் செய்ய அரசாங்கம் முற்பட்டபோது பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் மயானத்திலும் அண்ணா நகர் மயானத்திலும் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து பலரும் வருத்தமும் கண்டனமும் தெரிவித்த நிலையில், நடிகர் விவேக் மக்களிடம் மனிதநேயம் காணாமல் போனதோ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
அவர் கூறும்போது, “சைமன் என்ற மருத்துவர், நம்மைப் போன்ற மக்களுக்கு தன் உயிரினையும் பொருட்படுத்தாது உழைத்ததன் விளைவுதான் அவரது உயிர்ப்பலி நடந்தேறக் காரணம். நமக்காக உயிர் தியாகம் செய்த அந்த புண்ணிய ஆத்மாவை கீழ்ப்பாக்கம் மயானத்திலும் அண்ணா நகர் மயானத்திலும் மக்கள் அடக்கம் செய்யவிடாது எதிர்ப்பு தெரிவித்தது என்னுள் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர்களின் உடலில் கொரோனா இருக்காது என்பதை தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள், தங்கள் குடும்பத்தினையும் விடுத்து நமக்காக உயிரைப் பணயம் வைக்கும் அவர்களை கொண்டாடாவிட்டாலும், அவமதிப்பது கூடாது. சைமன் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.