ராகவா லாரன்ஸ் நடனக் கலைஞராக தனது சினிமாப் பயணத்தினை 1993 ஆம் ஆண்டு ஜென்டில் மேன் படத்தின்மூலம் துவக்கினார். பல படங்களில் பின்னணி நடனக் கலைஞராக இருந்த இவர் தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக உருவெடுத்தார். அதன்பின்னர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் கோலிவுட்டில் வலம் வருகிறார்.
சினிமாவில் மட்டும் ஹீரோவாக விளங்கும் பல ஹீரோக்களுக்கு மத்தியில் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகத் திகழும் ஒரு நடிகர் ராகவா லாரன்ஸ்தான். அவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரம் நடத்தி வருவதோடு, அவர் எடுக்கும் பல படங்களில் ஆதரவற்றோர், திருநங்கைகள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு பட வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.
மனித ஜீவன்கள் எங்கு தவித்தாலும் உதவிக்கரம் நீட்டும் முதல் நபராக இருப்பவர் லாரன்ஸ் அவர்கள்தான். அனைத்து இக்கட்டான சூழ்நிலைகளிலும் உதவும் இவர் கொரோனா தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அவதியுறும்போது உதவி செய்யாமல் இருப்பாரா? இவர் ஏற்கனவே கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு மூன்று கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளார்.
அத்துடன் மீண்டும் 25 லட்சம் ரூபாய் தூய்மை பணியாளர்களுக்கும், 25 லட்சம் ரூபாய் சென்னை செங்கல்பட்டு வினியோகஸ்தர் சங்கத்திற்கும் அளித்துள்ளார். இதுவரை அவர் 3.5 கோடி ரூபாய்க்கு நன்கொடை வழங்கியுள்ள நிலையில், தற்போது அவர் சென்னையில் இயங்கும் இரு அம்மா உணவகங்களுக்காக 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
ரீலில் மட்டும் அல்லாது ரியலில் ஹீரோவாக இருக்கும் இவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகிறார்.