பராசக்தி மூன்று சக்திகளாக இணைந்து மகிஷாசுரனை போரிட்டு வாகை சூடிய நாள் தான் விஜயதசமி. அன்னை பராசக்தி ஒன்பது ராத்திரிகளுக்கு போரிட்ட நாட்களை ‘நவராத்திரி நாட்கள்’ என்றும், வெற்றியை கொண்டாடப்படும் நாள் தான் விஜயதசமி. விஜய் என்றால் வெற்றி என்பதாகும், தசமி என்றால் பத்து ஆகும்.
பத்தாம் நாள் மகிஷனை அழித்ததால் மகிஷாசூரமர்தியானாள் எனக் கூறப்படுகின்றது. பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞான வாசத்தின் பொழுது வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து பூஜை செய்ததும் விஜயதசமி நாள் அன்று தான்.
விநாயக புராணத்தின் படி வன்னி மரத்தை நினைத்தாலோ, பூஜை செய்தாலோ நாம் செய்த பாவங்கள் எல்லாம் அகலும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. ஆகவே விஜயதசமி நாளில் வன்னி மரத்துடன் இருக்கும் பிள்ளையாரை வணங்கி வந்தால் நினைத்த காரியம் கைக்கூடும்.
அம்மனை ஸ்ரீ வித்யா என்று கூறி ஆராதனை செய்ய வேண்டும். ஒன்பது நாள் ஆராதனை முடிந்து பத்தாவது நாள் நம் வீட்டை விட்டு வழி அனுப்பும் பொழுது நமக்கு வேண்டிய வரங்களை கொடுப்பாள். அதிகாலையில் பூஜை செய்து ஆரத்தி எடுக்க வேண்டும். மரம் செடி அருகில் ஆரத்தியை ஊற்றி விட வேண்டும். கொலு வைக்கின்ற பழக்கம் இருப்பவர்கள் நல்ல நேரம் பார்த்து பொம்மையை நகர்த்தவும்.
நவராத்திரி ஒன்பது நாட்கள் வழிபாடு செய்ய இயலாதவர்கள் விஜயதசமி அன்று வழிபாடு செய்யலாம். ஆணவம் பிடித்த அரக்கனை அடியோடு அழித்த நாள் என்பதால் அன்றைய தினத்தில் நல்ல காரியங்களை செய்ய நன்னாளாக கருதப்படுகின்றது.
விஜயதசமி அன்று துவங்கும் எந்த ஒரு காரியமும் வெற்றியை கொடுக்கும். குறிப்பாக குழந்தைகளை விஜயதசமி நாளில் தான் முதன் முதலில் பள்ளியில் சேர்த்து விடுவார்கள்.
இந்த நவராத்திரி நாட்களில் எல்லாவற்றுக்கும் மேலானதாக சண்டி ஹோமம் கருதப்படுகின்றது. சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றாக இணைந்த வடிவானவள். இந்த சண்டி ஹோமத்தின் சிறப்பு மூன்று தேவிகளையும் ஒரே வடிவமாக பூஜை செய்வதே ஆகும். விஜயதசமி நாளில் இதை செய்வதால் அதிக அளவில் நற்பலன்கள் உண்டாகும்.