வணக்கம்டா மாப்ள தேனிலருந்து இப்படியொரு அடையாளத்தை புதிதாக உருவாக்கி அந்த வார்த்தையை டிரெண்டிங் ஆக்கி புதிய சாதனை படைத்தவர் அருண்குமார்.
டிக் டாக்கில் வணக்கம்டா மாப்ள தேனிலருந்து சொன்னா தெரியாதவங்க இருக்க முடியாது. இவர் வீடியோவை யூ டியூபில் எடுத்து சிலர் தாறுமாறாக அப்லோடிவிட்டதால் சீக்கிரம் பாப்புலரானார் இவர்.
டிக் டாக்கையும் தாண்டி பேஸ்புக், வாட்ஸப், டுவிட்டர் என இவரின் வீடியோக்கள் டிரெண்டிங் ஆனது. யார்ரா இவர் வித்யாசமா இருக்காரே என நினைத்து பல யூ டியூப் சேனல்கள் இவரை பேட்டி எடுக்க போட்டி போட்டன.
அருண்குமார் தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் வெள்ளந்தியான மனதுக்கு சொந்தக்காரர் இவர். இவரிடம் பேசுவது உங்கள் பக்கத்து வீட்டுக்கார அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமா என உறவுக்காரர்களிடம் பேசுவது போல இயல்பாக இருக்கிறது. மதுரை தமிழில் மிக அழகாக இயல்பாக பேசுகிறார்.
முதலில் இந்த டிக் டாக் செயலி பற்றி இவருக்கு தெரியாதாம். இதில் வந்த சில பெண்களின் அநாகரீக வீடியோவை பார்த்த உடன் இது போல பெண்கள் செய்யக்கூடாது என்ற அடிப்படையிலேயே தொடர்ந்து கண்டிக்கும் விதமாகவும் அதை தனது மண்ணின் மனம் மாறாத குறும்புத்தனத்தோடு வணக்கம்டா மாப்ள தேனிலருந்து இந்த மாதிரிலாம் வீடியோ போடாதிங்கம்மா, இந்த மாதிரி வீடியோவை இந்தாப்பா டிக் டாக்கு அனுமதிக்காத என்ற வகையிலேயே அதிரடியாக தொடர்ந்து பேசி வந்தார்.
தனது மாவட்டத்தின் பெயரை சொன்னால்தான் அனைவருக்கும் தெரியும் என்றுதான் தன் ஊர் பெயர் சின்னமனூரை சொல்லாமல் வணக்கம்டா மாப்ள தேனிலருந்து என்று ஆரம்பிப்பாராம்.
தனது மனைவியை மகிழ்விப்பதற்காகவும் இது போல ஜாலியான வீடியோக்களை இவர் பதிவிடுவாராம்.
இவரின் வீடியோக்களின் ஸ்பெஷல் என்னவென்றால் சினிமா சம்பந்தப்பட்ட பாடல்காட்சியாலோ, நடிப்பாலோ சினிமா பின்னணி இசையில் வரும் நடிப்பாலோ இவர் புகழ் அடையவில்லை . தானாக ஒரு விஷயத்தை பேசி ரசிக்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பேசிய பல பேட்டிகளில் இவர் மிகவும் வெள்ளந்தியானவர் என இவர் பேசியதை வைத்தே பார்க்க முடிந்தது. எதிர்காலத்தில் மதுரை பக்கம் இருந்து சென்று சினிமாவில் சாதித்த வடிவேல், சூரி போன்ற நகைச்சுவை கலைஞர்களை போல இவரும் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.
இருப்பினும் இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு அதிக விருப்பம் இல்லையாம். சொந்த ஊரும் கிராமமும் பசுமையும்தான் அவருக்கு பிடித்திருக்கிறதாம். இருந்தாலும் படைவீரன் படத்தை இயக்கிய தனது உறவினர் போல யாராவது கூப்பிட்டால் நடிப்பாராம்.
இந்த வருடத்தின் மிகபிரபலமானவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.