அழகான குழந்தைச் செல்வம் கிடைக்க, திருமணத்தடை நீங்க இன்று முருகப்பெருமானை வழிபடுங்க…!

முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் கிருத்திகை. அதிலும் தை கிருத்திகை 2023 இன்று 30.1.2023 (திங்கட்கிழமை) வருகிறது. இந்த நாளில் நாம் எப்படி முருகப்பெருமானை வேண்டி நாம் வழிபடுவது என்று பார்க்கலாம்.

நிலையான செல்வம், நீண்ட ஆயுள் என அனைத்துப் பலன்களையும் அள்ளித்தருகிறது தை கிருத்திகை. இந்த இனிய நாளில் முருகனை எப்படி வழிபடுவது என்று பார்ப்போம்.

குழந்தை பாக்கியம், திருமணத்தடை நீங்க, தோஷத்தடை, தருமபுத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சனைகள், சகோதரர்களால் ஏற்படக்கூடிய சங்கடங்கள் நீங்க இந்தநாளில் முருகப்பெருமானை மனமாற நினைத்து விரதமிருந்து வழிபட வேண்டும்.

கிருத்திகை நட்சத்திரம் தொடங்கும் நேரம் 29.01.2023 அன்று இரவு 8.20 மணி முதல் இன்று (30.1.2023) இரவு 10.15 மணி வரை உள்ளது.

தை கிருத்திகை தினத்திற்கு முதல் நாள் இரவு முதலே விரதம் இருப்பார்கள். தடை, தோஷம் இருந்தால் நீங்கும். இந்த நாளில் விரதம் முருகனைப் போல் அழகுடன் பிள்ளை பிறக்கும். கிருத்திகைக்கு முதல் நாள் இரவில் விரதம் இருக்க முடியாதவர்கள் இன்று இருக்கலாம்.

Kolam
Kolam

இன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்ததும் காலை 6 மணி முதல் விரதம் இருக்கலாம். பூஜை அறையில் முருகன் படத்திற்கு முன்பாக சற்கோண கோலமிட்டு ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை எழுதி அதில் 6 நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முக்கியமாக 6 தீபமும் நெய்தீபமாக ஏற்றுவது மிகவும் சிறப்பு. அப்படி ஏற்ற முடியாதவர்கள் அந்த 6 தீபத்தில் 1 நெய் தீபமாக ஏற்ற வேண்டும்.

முருகனை மனமாற வேண்டி 1 டம்ளர் பால் நைவேத்தியமாக வைத்து வழிபட்டு வணங்கி விட்டு விரதத்தைத் தொடங்கலாம். அன்று முருகன் சந்நிதிக்குச் சென்று அங்கு நடைபெறக்கூடிய அபிஷேக ஆராதனைகளைக் கண்டு வழிபடுவது மிகவும் சிறப்பு. உங்களால் முடிந்த அளவு அபிஷேகத்திற்குரிய பொருள்களை வாங்கிக் கொடுக்கலாம்.

மனதில் முருகனை நிறுத்தி மன ஒருமைப்பாட்டுடன் ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை 108 தடவை உச்சரித்து வழிபட வேண்டும்.

வில்வ இலைகளால் அர்ச்சிப்பது மிகவும் சிறப்பு. அவரவர் உடல்நிலைக்குத் தகுந்தாற்போல் விரதமிருக்கலாம். இன்று மாலை 6 மணிக்கு 6 விதமான நைவேத்தியங்களை வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பு. அப்படி முடியாதவர்கள் சர்க்கரைப் பொங்கலை வைத்தாவது வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

Lord Muruga 2
Lord Muruga

பூஜை முடிந்ததும் நைவேத்தியத்தை அங்கு உள்ளவர்களுக்குக் கொடுக்கலாம். வசதியானவர்கள் எனில் அன்னதானம் செய்யலாம். திருமணத்தடை நீங்கவும், குழந்தைப் பாக்கியம் பெறவும் மடிப்பிச்சை ஏந்தி தங்களது வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர். இன்று திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் ஏராளமாகத் திரண்டு தரிசனம் பெறுவர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews