தெலுங்கில் நடிச்சது 500 படங்கள்.. தமிழில் 15 தான்.. ஆனாலும் பிரபல நடிகைக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்!

தெலுங்கில் சுமார் 500 படங்கள் வரை நடித்துள்ளவர் பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி. இவர் ஆந்திராவில் காக்கிநாடா பிரசிடென்சி கல்லூரியில் படித்தார். சிறுவயதிலேயே அவருக்கு அபாரமான நடிப்பு திறமை இருந்ததை அடுத்து நடனம், நாட்டியம், நடிப்பு ஆகியவற்றை முறையாக கற்றார். இதன் பின்னர் கடந்த 1960 ஆம் ஆண்டு  என்டி ராமராவ் இயக்கி நடித்த ’சீதாராமா கல்யாணம்’ என்ற படத்தில் நாயகியாக தனது சினிமா பயணத்தில் காலடி எடுத்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் பிரபல நடிகர்களான என்டி ராமராவ், நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா உள்பட பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கைத் தவிர தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்கள் நடித்துள்ளார் கீதாஞ்சலி.

geethanjali1

தமிழில் முதல் முறையாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ’சாரதா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் எம்ஆர் ராதாவின் மூன்றாவது மனைவியாக நடித்திருந்தார். அதே போல, தமிழில் அவர் நடித்த முதல் படத்திலேயே அபார நடிப்புத் திறனால் பலரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார்.

மீண்டும் கே.எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ’தெய்வத்தின் தெய்வம்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இதனை அடுத்து அவர் எம்ஜிஆர். சிவாஜி உடனும் சில படங்களில் நடித்தார். எம்ஜிஆர் உடன் ’பணம் படைத்தவன்’ ’ஆசை முகம்’  ’அன்னமிட்ட கை’ போன்ற படங்களில் நடித்தார். அதேபோல் சிவாஜி கணேசனுடன் ’நெஞ்சிருக்கும் வரை’ ’அன்பளிப்பு’ போன்ற படங்களில் நடித்தார்.

மேலும் இவ்வாறு ஜெமினி கணேசன் உடன் ’வாழ்க்கை படகு’, கங்கா கெளரி, ரவிச்சந்திரன் உடன் ’அதே கண்கள்’ போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கில் 500 படங்கள் வரை நடித்திருந்த கீதாஞ்சலி, தமிழில் 15 படங்களில் தான் நடித்திருந்தார். ஆனாலும் அந்த குறுகிய தமிழ் திரைப்பயணத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து விட்டார். அதுமட்டுமின்றி ஹிந்தியில் ஐந்து படங்களும் மலையாளத்தில் மூன்று படங்களும் நடித்துள்ளார்.

நடிகை கீதாஞ்சலி  தெலுங்கு நடிகர் ராமகிருஷ்ணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆதி ஸ்ரீநிவாஸ் என்ற மகன் உள்ளார். கடந்த  2019 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி உடல்நலக் குறைவால் கீதாஞ்சலி காலமானார். அவர் மறைந்தாலும் அவர் நடித்த நூற்றுக்கணக்கான தெலுங்கு திரைப்படங்கள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews