சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது வாட்ஸ் அப் குழுவில் அவதூறு பகிர்ந்தாக தொடரப்பட்ட வழக்கில், அந்த தகவலுக்கும் தனக்கும் தொடர்பில்லை, முதல்வர் மீது தனிப்பட்ட மரியாதை வைத்துள்ளதாக முன்னாள் டி.ஜி.பி நடராஜ் வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது
தமிழக காவல்துறையில் முன்னாள் டிஜிபி ஆர். நடராஜ் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அதிமுகவில் இணைந்தார். 2016 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆக வெற்றி பெற்றார். தற்போது முன்னாள் எம்எல்ஏவான வாட்ஸ் அப் குழு ஒன்றில் இந்துக்களின் ஓட்டு தங்களுக்கு வேண்டாம் என்றும், இந்து ஓட்டுக்கள் இல்லாமலே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு பொய்யான செய்தியை நடராஜ் பகிர்ந்ததாக கூறப்படுகிறது..
இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீலா அளித்த புகார் மனு அடிப்படையில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மதக்கலவரத்தை தூண்டி விடுதல், அவமதித்தல், வதந்தி பரப்புதல் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் முன்னாள் டிஜிபி நடராஜ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை எடுத்து முன்னாள் டிஜிபி நடராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றிருந்தார்..
இந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் டிஜிபி நடராஜ் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் தமிழக முதல்வர் மீது தனிப்பட்ட மரியாதை கொண்டுள்ளதாகவும் தன் மீதான வழக்கு எதிர்பார்க்காத ஒன்றும் அந்த வாட்ஸ் அப் தகவலுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ,அதை தான் அங்கீகரிக்கவும் இல்லை என்று கூறினார்.
அப்போது அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் பி. எஸ் .ராமன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, இந்தப் பிரமாண பத்திரத்தை அதே வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டு அதன் நகலை காவல்துறைக்கு வழங்குமாறு வலியுறுத்தினார்கள்.
இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், முன்னாள் டி.ஜி.பி நடராஜ் வருத்தம் தெரிவித்துள்ளதால், 24 மணி நேரத்திற்குள் அதே வாட்ஸ் அப் குரூப்பில்ர பிரமாணம் பத்திரத்தை பதிவிட்டு உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.