பட்டப்படிப்பு முடித்த 40 வயதுக்குள் உள்ளவர்கள் ஒரு லட்சம் பெறலாம்.. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

திருச்சி: பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை வேளாண் தொழில் தொடங்கிட ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு நிதியுதவிடன் 1 லட்சம் மானியம் தருகிறது. 40 வயதுக்குள் உள்ள இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என…

Tamil Nadu Government is giving a subsidy of 1 lakh to the youth : how to apply

திருச்சி: பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை வேளாண் தொழில் தொடங்கிட ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு நிதியுதவிடன் 1 லட்சம் மானியம் தருகிறது. 40 வயதுக்குள் உள்ள இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “திருச்சி மாவட்ட வேளாண் துறை மூலம் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த இளைஞா்கள் வேளாண் சாா்ந்த தொழில் தொடங்கி, தொழில் முனைவோா் ஆகும் திட்டத்துக்கு ரூ.1 லட்சம் மானியம் வேளாண் துறை மூலமாக வழங்கப்படுகிறது.

தற்போது திருச்சி மாவட்டத்துக்கு வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்ற 21 முதல் 40 வயதுக்குட்பட்ட அரசு மற்றும் தனியாா் நிறுவனத்தில் பணியில் இல்லாத, சிறந்த கணினி புலமையுள்ள வேளாண் தொடா்புடைய செயலிகளைப் பயன்படுத்தும் திறனுள்ள பட்டதாரிகள் 3 போ் வேளாண் தொழில் முனைவோராகச் செயல்பட தமிழக அரசின் அரசாணை பெறப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனாளி தனது மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சாா்ந்த பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் நிறுவ வேண்டும். இதற்கு உட்கட்டமைப்பு நீங்கலாக அதிகபட்சமாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும். எனவே, தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பிற்கான சான்றிதழ், உத்தேசித்துள்ள தொழில் தொடா்பான விரிவான திட்ட அறிக்கை, ஆதாா் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு நகல் மற்றும் வங்கியில் கடனுதவி பெற்று திட்டம் தொடங்குபவா் எனில் அதற்கான ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களையும், விரிவான திட்ட அறிக்கையையும் அக்ரிஸ்நெட் வலைதளத்தில் பதிவேற்றி, விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களை தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு திருச்சி ஆட்சியர் கூறியுள்ளார்.