தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் காலாண்டுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. வழக்கமாக செப்டம்பர் இரண்டாவது வாரம் தொடங்கி அடுத்த 10 நாட்களில் தேர்வு முடிந்து 10 நாட்கள் விடுமுறை விடப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு காலாண்டுத் தேர்வானது வருகிற 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 1 பிளஸ் 2வகுப்புகளுக்கு மட்டும் ஒருநாளைக்கு முன்பாகவே தேர்வுகள் தொடங்குகிறது.
மேலும் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அதிக வெயில் காரணமாக பள்ளிகள் சற்று தாமதமாகவே தொடங்கப்பட்டது.
மேலும் அதனை ஈடுகட்டும் வகையில் மாதத்தில் 2 சனிக்கிழமைகளில் பள்ளிகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டது. தற்போது காலாண்டுத் தேர்வு விடுமுறையிலும் நான்கு, ஐந்து நாட்கள் விடுமுறையானது குறைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பாடங்களை முடிக்கவும், அடுத்தடுத்த தேர்வுகளுக்கு அவர்களைத் தயார் செய்யும் பொருட்டும் விடுமுறைகள் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிபிஎஸ்இ, தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு ஏற்கனவே காலாண்டுத் தேர்வுகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வழக்கமாக காலாண்டுத் தேர்வுக்கு 10 நாட்கள் விடுமுறை விடப்படும் பட்சத்தில் இந்த ஆண்டு 5 நாட்களே விடுமுறை விடப்பட உள்ளதால் மாணவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.