மம்தா பானர்ஜி துணிச்சலான பெண், அவர் பிரதமராக வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

மேற்குவங்க முதல் வாரம் மம்தா பானர்ஜி துணிச்சலான பெண் என்றும் அவர் பிரதமராக வேண்டும் என்றும் முன்னாள் பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக ஒரு புறமும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு அணியாகவும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்று சேர்க்க பல கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆகியோர்கள் ஒருங்கிணைந்த அணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் இந்த அணியில் காங்கிரஸ் கட்சியை இணைப்பதில் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. காங்கிரஸ் இல்லாத எதிர்கட்சியின் கூட்டணி பாஜகவை வீழ்த்த முடியாது என்று சிலரும் காங்கிரஸ் இல்லாத எதிர்கட்சி கூட்டணி தான் வெற்றி பெறும் என்று சிலரும் கூறி வருகின்றனர். இந்தியா முழுவதும் நடைபயணம் சென்றதை எடுத்து ராகுல் காந்திக்கு தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் காங்கிரஸ் கட்சி தலைமையில் தான் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.

subramanian swamyஇந்த நிலையில் முன்னாள் பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் என்றும் அவர் துணிச்சலான பெண் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து குழப்பம் நீடித்து வரும் நிலையில் பாஜகவை சேர்ந்த ஒருவரே பிரதமர் வேட்பாளராக மம்தாவை தேர்வு செய்யலாம் என்று கூறுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு அஞ்சாத ஒரு எதிர்க்கட்சி தலைவர் தேவை என்றும் தற்போதைய மத்திய அரசை எதிர்ப்பதற்கு சரியான நபர் மம்தா பானர்ஜி என்றும் சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜியை அமலாக்கத்துறை அல்லது சிபிஐ வைத்து மிரட்ட முடியாது என்றும் அவர் கம்யூனிஸ்ட்களை எதிர்த்து போராடிய விதத்தை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். ஒரு காலத்தில் ஜெயலலிதா சக்திவாய்ந்த பெண்ணாக இருந்தார் அதன் பிறகு மாயாவதியை அவ்வாறு நினைத்தேன், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மம்தா பானர்ஜி ஒருவர்தான் துணிச்சலாக அநீதியை எதிர்க்க கூடியவர் என்று சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews