உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இந்தியா vs ஆஸி மேட்ச்.. இதுக்கு முன்னாடி டி 20 வேர்லடு கப்ல இவங்க மோதுனப்போ என்னாச்சு தெரியுமா..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றில் தங்களின் கடைசி போட்டியில் மோத உள்ளனர். இந்த போட்டியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை எதிர்பார்த்து தான் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் வெறித்தனமாக வெயிட்டிங்கில் இருந்து வருகின்றனர்.

குரூப் 1 இல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது. இதில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தலா இரண்டு போட்டிகள் ஆடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளனர். இன்னொரு பக்கம் இரண்டு போட்டிகளில் ஆடி முடித்துள்ள பங்களாதேஷ் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.

இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியும் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளும் மோத உள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் நேரடியாக அரை இறுதிக்கும் முன்னேறிவிடும். ஒருவேளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி அடைந்தாலும் சிறிய ரன் வித்தியாசத்தில் அது நிகழ்ந்தால் அவர்கள் அரை இறுதி சுற்றை உறுதி செய்யது விடலாம்.

இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளில் வெற்றி மற்றும் ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு சூழலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் கடைசியாக டி 20 உலக கோப்பைத் தொடரில் மோதிய போட்டியின் முடிவு ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

இந்த இரண்டு அணிகளும் கடைசியாக 2016 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை தொடரில் மோதி இருந்தது. சூப்பர் 10 சுற்றில் இரு அணிகளும் மோதி இருந்த போது முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் ரோஹித், தவான் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாக, மூன்றாவது வீரராக உள்ளே வந்த கோலி 82 ரன்கள் அடித்ததால் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டிப் பிடித்திருந்தது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முன்னேற்றம் கண்டது இந்திய அணி. ஆனால் இதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அரையிறுதியில் தோல்வியடைந்து அவர்கள் வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதிய கடைசி டி20 உலக கோப்பை போட்டியில் கோலி அதிரடியாக ஆடி ரன் சேர்த்திருந்தார். அந்த மேஜிக் மீண்டும் ஒருமுறை நடைபெற வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது. இதே போல, இந்திய அணி வெற்றி பெற்றால், கடந்த ஆண்டு இரண்டு ஐசிசி கோப்பைகளை இழக்க செய்த ஆஸ்திரேலிய அணியை பழியும் வாங்கி விடலாம்.