இப்படியும் ஒரு வினோத சாதனையா.. வெளிய போனாலும் சைலண்டா சரித்திரம் படைத்த இலங்கை..

By Ajith V

Published:

சூப்பர் 8 சுற்றிற்கான ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் தொடர்ந்து இழுபறி இருந்து வந்த நிலையில் பங்களாதேஷ் அணி, நேபாளத்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கும் தகுதி பெற்றனர். அவர்களைப் போலவே நெதர்லாந்து அணிக்கும் ஒரு சிறிய வாய்ப்பு இருந்த நிலையில் இலங்கைக்கு எதிராக படுதோல்வி அடைந்ததால் அப்படியே வெளியேறினர்.

டி பிரிவில் பங்களாதேஷ், இலங்கை, நெதர்லாந்து, சவுத் ஆப்பிரிக்கா, நேபாளம் உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றிருந்தது. இதில் ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது. அப்போதே சூப்பர் 8 வாய்ப்பும் ஏறக்குறைய இழந்து போய் விட்டனர்.

தொடர்ந்து, நேபாளத்திற்கு எதிரான போட்டி மழையால் ரத்தாக, கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்தை எதிர்த்து ஆடி இருந்தது இலங்கை. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 46 ரண்களும், அசலங்கா 21 பந்துகளில் 46 ரன்களும் எடுத்திருந்தனர்.

தொடர்ந்து ஆடியிருந்த நெதர்லாந்து அணி, இலங்கையின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இலங்கை அணியில் அனைவருமே சிறப்பாக பந்து வீச, அதிகபட்சமாக நுவான் துஷாரா 24 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

இது தவிர தீக்ஷனா மற்றும் ஷனகா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும், பதிரானா மற்றும் ஹசரங்கா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தனர். இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை என்னும் நிலையில் டி20 உலக கோப்பை தொடரை வெற்றியுடன் முடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 ஆம் ஆண்டு 20 உலகக் கோப்பையை கைப்பற்றி இருந்த இலங்கை அணி, கடந்த சில ஐசிசி தொடர்களில் தடுமாறி வரும் சூழலில் நிச்சயம் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடி கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில் தான் நெதர்லாந்துக்கு எதிராக 200 ரன்கள் அடித்தபோது மிக முக்கியமான ஒரு சாதனையை டி20 உலக கோப்பை போட்டிகளில் இலங்கை அணி மேற்கொண்டுள்ளது.

ஒரு டி 20 உலக கோப்பை இன்னிங்சில் 200 ரன்களைக் கடந்தும் ஒரு வீரர் கூட 50 ரன்கள் அடிக்காத பெருமையை மூன்றாவது முறையாக இலங்கை பெற்றுள்ளது. இதே தொடரில் ஆஸ்திரேலிய அணி 201 ரன்களை இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த போதும் எந்த வீரரும் அரை சதம் அடிக்கவில்லை அதேபோல 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 200 ரன்களை இந்தியாவிற்கு எதிராக குவித்த போதும் யாரும் அரைச்சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.