கங்குலிக்கு பிறகு எந்த இந்திய கேப்டனுக்கும் கிடைக்காத கவுரவம்.. ஒரே வருசத்தில் ரோஹித் சாதிச்சது எப்படி??..

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டிக்கும் முன்னேறி உள்ளதால் கேப்டன் ரோஹித் ஷர்மா மிக முக்கியமான சாதனை ஒன்றை கிரிக்கெட் அரங்கில் செய்து வரலாறு படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை இருந்து வரும் ரோஹித் சர்மாவின் தலைமையில் மிகச் சிறப்பாக போட்டிகளை எதிர்கொண்டு வருகிறது.

அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களை மிக அழகாக ஆதரவு தெரிவித்து அவர்களை எந்த அளவுக்கு மேம்படுத்த முடியுமோ அதற்கான முயற்சிகளிலும் இறங்கி வருகிறார் ரோஹித். சீனியர் வீரர்கள் தொடங்கி தற்போது அறிமுகமாகும் இளம் வீரர்கள் கூட ரோஹித்தின் அணுகுமுறையை பாராட்டி தான் வருகின்றனர். கேப்டன் என்ற தொனி இல்லாமல் அனைவரிடமும் நன்றாக பழகும் ரோஹித், போட்டிக்கு நடுவே பந்துவீச்சு ரொட்டேஷன், ஃபீல்டிங் நிப்பாட்டுவது என அனைத்து விஷயங்களிலும் ஸ்கோர் செய்து வருகிறார்.

இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியும் தற்போது டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியிலும் முன்னேறி உள்ளது. பந்துவீச்சாளர்களை தக்க நேரத்தில் பயன்படுத்தி பல போட்டிகளில் வெற்றியை குவித்திருந்த ரோஹித் ஷர்மா நிச்சயம் முதல் ஐசிசி தொடரை வென்று சாதனை புரிவார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றிருந்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் உலகக்கோப்பை கைகூடாமல் போயிருந்தது. இந்த இரண்டிற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களால் வெற்றியை பெற்று கோப்பையை தொட்டு பார்க்க முடியவில்லை.

ஆனால் இந்த முறை நிச்சயம் ஐசிசி கோப்பை மேல் இருக்கும் மோகத்தை உடைத்து தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி 17 ஆண்டுகள் கழித்து டி20 உலக கோப்பையை சொந்தமாக்கும் என்று தான் தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் தான் தோனி, கோலி உள்ளிட்ட கேப்டன்களால் முடியாத ஒரு விஷயத்தை ரோஹித் ஷர்மா செய்து பட்டையை கிளப்பியுள்ளார்.

தொடர்ச்சியாக மூன்று ஐசிசி தொடரின் இறுதி போட்டியில் ஒரு அணியை வழிநடத்திய பெருமையை முதல் ஆளாக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாட் படைத்திருந்தார். அவருக்கு பிறகு இந்தியன் கேப்டன் சவுரவ் கங்குலி, 2000 மற்றும் 2002 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும், 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரிலும் தொடர்ச்சியாக மூன்று முறை இந்திய அணி இறுதி போட்டிக்கு செல்ல வழி செய்திருந்தார்.

இதன் பின்னர் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தலைமையில் 2019 உலகக்கோப்பை, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் அதே ஆண்டில் நடந்த டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியிலும் நுழைந்திருந்தது.

இப்படி மூன்று கேப்டன்கள் வரிசையில் தற்போது ரோஹித் சர்மாவும் இடம்பெற்றிருக்க, 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் உலக கோப்பை இறுதி போட்டிக்கு பிறகு, டி20 உலக கோப்பையிலும் இந்திய அணியை தொடர்ச்சியாக இறுதி போட்டிக்கு நுழைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.