கோலி பத்தி ரோஹித் தாய் சொன்ன வார்த்தை.. இன்ஸ்டாவை கலக்கும் லேட்டஸ்ட் பதிவு…

இந்திய அணி உலக கோப்பையுடன் இருக்கும் புகைப்படங்களை விட ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவர் மட்டுமே உலகக்கோப்பையுடன் இருக்கும் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது. உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை மிக அசால்டாக எதிர்கொள்ளும் இந்த இரண்டு வீரர்களும் முன்னணி வீரர்களான பின்னர் ஒரு உலக கோப்பையை கூட வெல்ல முடியாத சூழல்தான் இருந்து வந்தது.

அப்படி இருக்கையில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு இந்த உலக கோப்பை சமர்ப்பணமாக இருந்தது போல கோலி மற்றும் ரோஹித் ஆகியோரும் இதற்கு சொந்தம் கொண்டாட மிக மிக தகுதி உள்ளவர்கள் தான். பல ஆண்டுகாலம் தலைசிறந்த வீரர்களாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வலம் வந்த போதிலும் கூட ஐசிசி கோப்பையை தான் நெருங்க முடியாமல் இருந்து வந்தது.

அப்படி ஒரு நிலையில் தான் இந்த டி20 உலக கோப்பை கோலி மற்றும் ரோஹித் என இரண்டு பேருக்குமான உலக கோப்பைத் தாகத்தின் விடையாகவும் மாறி உள்ளது. இரண்டு பேரும் டி20 சர்வதேச போட்டியிலிருந்து உலக கோப்பையை வென்ற பின்னர் ஓய்வினை அறிவித்திருந்தனர். முன்னதாக விராட் கோலியிடம் இருந்து ரோஹித்திடம் கேப்டன்சி மாற்றப்பட்ட சமயத்தில் இவர்கள் இருவருக்கிடையே நட்பு இல்லை என்றும் மிகப் பெரிய சண்டை உருவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ரோஹித் கேப்டன் ஆனதால் கோலி கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளிவர பிசிசிஐ சுற்றி சர்ச்சைகளும் உருவாகி இருந்தது. ஆனால் அவை அனைத்தும் பொய் என இரண்டு பேருமே பல போட்டிகளில் ஒன்றாக ஆடி சகோதரர்கள் போல இந்த நிரூபிக்கவும் செய்தனர்.

தற்போதும் கூட விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் கோப்பையை வென்ற பின்னர் மாறி மாறி கட்டியணைத்துக் கொண்டதும் மிக நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது. அதே போல அந்த இரண்டு பேரும் ஒன்றாக இணைந்து கோப்பையுடன் வெற்றியை கொண்டாடி இருந்ததும் மிகப்பெரிய அளவில் வைரலாக இருந்தது.

அப்படி ஒரு சூழலில் ரோஹித் ஷர்மாவின் தாயாரான பூர்ணிமா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் உலக கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து டி20 கிரிக்கெட்டில் “Goat Duo” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரோஹித்தை குறிப்பிட்டு ‘மகள் தனது தோளிலும், நாடு தனக்கு பின்னாலும், சகோதரர் தனக்கு பக்கத்திலும் இருக்கிறார்’ என்றும் மிக நெகிழ்ச்சியான ஒரு கருத்துக்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார். ரோஹித்தின் தாயாருடைய இந்த பதிவு தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.