இப்படி இருந்தா எப்படி உலக கோப்பை ஜெய்க்குறது.. ரோஹித், கோலியால் இந்திய அணிக்கு ஏற்பட்ட அவமானம்..

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பைத் தொடரில் இதுவரை நான்கு போட்டிகளை ஆடி முடித்துள்ளது. இந்த நான்கிலும் அமெரிக்கா, அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தியுள்ளது. லீக் சுற்றில் மூன்று அணிகளை வீழ்த்தி நேரடியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது இந்திய கிரிக்கெட் அணி.

அப்படி இருக்கையில் தான் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து ஆடி இருந்தது இந்திய கிரிக்கெட் அணி. அவர்களை பொறுத்தவரையில் பேட்டிங் பலவீனமாக இருந்து வரும் நிலையில் பந்துவீச்சின் பெயரில் தான் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் பலமாக இருந்ததன் காரணமாகத்தான் நியூசிலாந்து அணியை மிக எளிதாகவும் அவர்களால் வீழ்த்த முடிந்து சூப்பர் 8 சற்றுக்கு முன்னேறி இருந்தது.

இதனால், இந்திய அணிக்கும் ஆபத்தாக இருப்பார்கள் என கருதப்பட்டது. அந்த வகையில் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியதும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த் உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருந்தனர். ஆனால் சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா உதவியால் 181 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து அடிய ஆப்கானிஸ்தான் அணி, 134 ரன்கள் மட்டுமே எடுக்க இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

முன்னதாக லீக் சுற்றின் முதல் மூன்று போட்டிகளில் பந்து வீச்சாளர்களே ஆட்டநாயகன் விருதை வெல்ல, சூப்பர் 8 முதல் போட்டியில் சூர்யகுமார் ஆட்ட நாயகன் விருதினை வென்றிருந்தார். பந்துவீச்சில் கலக்கி வரும் இந்திய அணியின் பெரிய கவலையாக டாப் ஆர்டர் பேட்டிங் தான் உள்ளது. நான்கு போட்டிகள் ஆடி முடித்துள்ள கோலி, இதுவரை 29 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள நிலையில் ரோஹித் சர்மாவும் ஒரு அரை சதமடிக்க, மற்ற போட்டிகளில் நல்லதொரு தாக்கத்தை தனது பேட்டிங் மூலம் ஏற்படுத்தவில்லை.

ரோஹித், கோலி என இந்திய கிரிக்கெட்டின் இரண்டு பெரிய முகங்கள் ஒன்றாக களமிறங்கிய போதிலும் அவர்களால் ரன் குவிக்க முடியாமல் இருந்து வருவது பெரிய அளவில் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. இதனிடையே இந்த டி20 உலக கோப்பை தொடரில் மற்ற சில அணிகளின் தொடக்க வீரர்களுக்கான ஸ்ட்ரைக் ரேட்டும், இந்திய அணியின் தொடக்க வீரர்களுக்கான ஸ்ட்ரைக் ரேட்டும் மிகுந்த வித்தியாசத்தை காண்பித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் 166 வரை ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களும் 152 வரை ஸ்ட்ரைக் ரேட்டை இந்த தொடரில் தக்க வைத்துள்ளனர். ஆனால், இந்திய அணியில் ரோஹித் மற்றும் கோலி என தொடக்க வீரர்கள் இரண்டு பேரும் சேர்ந்து 103 ஸ்ட்ரைக் ரேட் வரை இருப்பது தான் தற்போது மிகப்பெரிய கேள்வியாகவும் உள்ளது.