5 வயதில் தந்தை மறைவு.. பால் வாங்க கூட பணம் இல்லை.. பும்ராவின் சிறு வயது வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?

சமீபத்தில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பதும் இந்த வெற்றிக்கு காரணம் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் என்றாலும் 18 வது ஓவரை வீசிய பும்ரா எடுத்த ஒரு விக்கெட் தான் தென்னாப்பிரிக்கா அணியின் மனநிலையை குலைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வெற்றிக்கு பும்ரா அதிகபட்ச காரணம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.

இந்த நிலையில் இன்று பும்ரா வாழ்க்கையில் வசதியுடன் இருந்தாலும் அவரது சிறு வயது மிகவும் வறுமை ஆனது என்று அவரது பக்கத்து வீட்டுக்காரர் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவுதான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் அந்த பதிவில் கூறியிருப்பதாவது:

பும்ரா பிறந்த நாள் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. மருத்துவமனையில் அன்று ஆண் குழந்தை என்று நர்ஸ் அந்த குழந்தையை கொடுத்த போது நான் தான் அந்த குழந்தையை கையில் வாங்கினேன்.  பும்ரா குடும்பம் எனக்கு பல உதவிகள் செய்தது. எனக்கு திடீரென வேறு இடத்தில் வேலை என்பதால் நான் அந்த குடும்பத்தை விட்டு வேறு ஊருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால் அவ்வப்போது பும்ரா  குடும்பத்துடன் தொடர்பில் இருந்தேன். பும்ராவுக்கு  ஐந்து வயது இருக்கும் போது அவர் தந்தை எதிர்பாராத விதமாக மரணம் அடைந்து விட்டார். அதன் பிறகு பும்ரா குடும்பம் வறுமையில் வாடியது. சிறுவயதில் ஆசையாய் கேட்கும் பால் பாக்கெட் கூட வாங்கி கொடுக்க முடியாத நிலையில் தான் அவரது அம்மா இருந்தார். அவர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்தார்.

bumrah1

மிகுந்த கஷ்டத்தில் இருந்த பும்ரா அம்மாவை நான் அவ்வப்போது ஆறுதல் கூறி தேற்றினேன். அப்போது என்னிடம் கொஞ்சம் பணம் இருந்ததால் சிறு பையனாக இருந்த பும்ரா கேட்டவற்றை அவ்வப்போது வாங்கி கொடுப்பேன். அப்போது பும்ரா முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியை பார்த்து எனக்கு உற்சாகமாக இருக்கும்.

பும்ராவின் படிப்பு தான் அவரது குடும்ப சூழ்நிலை மாற்றும் என்று எல்லோரும் நம்பினோம். ஆனால் பும்ரா சிறுவயதிலேயே ஒரு பிளாஸ்டிக் வைத்துக்கொண்டு எப்போதும் பவுலிங் செய்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார். அப்போது அது எங்களுக்கு கவலையாக இருந்தாலும் இப்போது பெருமையாக உள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா பந்துவீச்சு முக்கியமாக இருந்தது என்பதை நினைத்து நான் மிகுந்த பெருமை அடைகிறேன். அன்றும் இன்றும் அதே பணிவுடன் பும்ரா இருக்கிறார். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று பும்ரா பக்கத்து வீட்டில் வாழ்ந்த தீபல் திரவதி என்பவர் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். இவர் ஒரு பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த நீண்ட பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.