இந்த விஷயம் பல வருஷம் நின்னு பேசும்… ஆஸ்திரேலியாவ தோக்கடிச்சது தாண்டி ஆப்கானிஸ்தான் செஞ்ச உலக சாதனை..

By Ajith V

Published:

டி 20 உலக கோப்பை வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு போட்டியாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதிய போட்டி அமைந்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் நிலைத்து நிற்கக் கூடிய வகையில், அடுத்த சில ஆண்டுகளுக்கு நின்று பேசும் வகையிலும் இந்த போட்டி அரங்கேறி உள்ளது.

பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட ஆசிய அணிகளைத் தாண்டி இந்தியாவிற்கு அடுத்தபடியாக தற்போது வேகமாக முன்னேறி தங்களை சர்வதேச அளவில் பல பெரிய நாடுகளுக்கு சவால் விடுத்தும் அணிகளில் ஒன்றாக தங்களை உருமாற்றி உள்ளது ஆப்கானிஸ்தான்.

லீக் சுற்றில் நியூசிலாந்தை 75 ரன்களில் சுருட்டி அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் அசுரபலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியையும் அவர்கள் எதிர் கொண்டிருந்தனர்.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், விக்கெட்டுகளை இழக்காமல் 100 ரன்களைக் கடந்தாலும் இடையே சில தடுமாற்றத்தை கண்டதால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டும் தான் எடுக்க முடிந்தது. இலக்கு குறைவாக இருந்த போதிலும் ஆஸ்திரேலியா அணியை நெருங்க முடியாமல் தடுப்பதற்கு என்ன செய்ய முடியுமோ அதை ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் நேர்த்தியாக செய்து கொண்டிருந்தனர்.

தொடக்க வீரர் ஹெட் டக் அவுட்டாக, வார்னர் மூன்று ரன்களிலும் பின்னர் வந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் 12 ரன்களிலும் அவுட்டாகி இருந்தனர். இன்னொரு புறம் மேக்ஸ்வெல் மட்டும் தனியாளாக பவுண்டரிகளை பறக்க விட மறுபுறம் எந்த வீரர்களும் 15 ரன்களை கூட தொட முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர்.

மேக்ஸ்வெல் 59 ரன்களில் அவுட்டாக, ஆஸ்திரேலிய அணியில் வெற்றி வாய்ப்பு பறிபோகத் தொடங்கியது. இதனால் நான்கு பந்துகள் மீதம் வைத்து ஆஸ்திரேலிய அணியின் ஆல் அவுட்டானதுடன் 127 ரன்கள் மட்டும் தான் அவர்களால் எடுக்க முடிந்தது. இதன் மூலமாக ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளை வீழ்த்தியுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐசிசி தொடரில் வெற்றி பெற்றுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இதில் மற்றொரு முக்கியமான விஷயமாக, சிறப்பான சம்பவத்தையும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல்முறையாக ஒரு டி 20 போட்டியில் செய்த அணி என்ற பெருமையை ஆப்கானிஸ்தான் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவை எதிர்த்து டி 20 போட்டிகளில் ஆடியுள்ள எந்த அணிகளும் இதுவரை 15 ஓவர்கள் வரை முதல் விக்கெட்டிற்கு பேட்டிங் செய்தது கிடையாது.

ஆனால் ஆப்கானிஸ்தான் அணி அவர்களுக்கு எதிராக முதல் விக்கெட்டிற்கு 16 வது ஓவர் வரை நிலைத்து நிற்க, அவர்களுக்கு எதிராக இத்தனை பந்துகள் பேட்டிங் செய்த முதல் தொடக்க ஜோடி என்ற பெருமையும் ஆப்கானிஸ்தான் வீரர்களான குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.