10 வருசமா அஸ்வின் தக்க வெச்ச பெருமை.. சைக்கிள் கேப்பில் காலி செய்து வரலாறு படைத்த அர்ஷ்தீப் சிங்..

டி20 போட்டிகள் என வந்துவிட்டாலே பேட்ஸ்மேன்கள் தான் எப்போதுமே ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் நடப்பு டி20 உலக கோப்பையில் அப்படியே நேர்மாறாக பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் பல பந்து வீச்சாளர்கள் அதிகம் விக்கெட்டுகளை எடுத்து எதிரணிகளை அச்சுறுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணியின் பேட்டிங் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் மைதானத்தில் இதுவரை ஆடி முடித்துள்ள மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் பேட்டிங்கில் மிகப்பெரிய குழப்பம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

பந்த், சூர்யகுமார், ரோஹித் உள்ளிட்ட சிலரை தவிர எந்த வீரர்களும் நம்பிக்கை அளிக்கும் விதமாக பேட்டிங்கை வெளிப்படுத்தாத நிலையில் கோலி கூட மூன்று போட்டிகளில் சேர்த்து ஐந்து ரன்கள் மட்டும் தான் எடுத்துள்ளார். இனிமேல் நியூயார்க் மைதானத்தில் போட்டிகள் இல்லை என்றாலும் பேட்டிங்கில் சிறிய தவறுகளை செய்து வரும் இந்திய அணி, அதனை எல்லாம் திருத்திக் கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் களமிறங்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

ஆனால் இன்னொரு பக்கம் இந்திய அணி இந்த மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது அவர்களின் பந்துவீச்சு யூனிட் தான். முதல் இரண்டு போட்டிகளில் சேர்த்து மொத்தம் ஐந்து விக்கெட் எடுத்திருந்த பும்ரா, இரண்டிலும் ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக மோதிய இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

இதனால் அமெரிக்கா வீரர்களால் ரன் அடிக்க முடியாமல் போக இந்திய அணி தட்டு தடுமாறி வெற்றியை பெற்றிருந்தது. சூப்பர் 8 சுற்றுக்கும் தற்போது முன்னேற்றம் கண்டுள்ளதால் இதே பந்து வீச்சு தொடரும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணியை எதிர்க்க முடியாமல் எதிரணிகள் திணறும் என்றே தெரிகிறது.

அப்படி ஒரு சூழலில் தான் டி20 உலக கோப்பைத் தொடரில் இந்திய பந்து வீச்சாளராக அஸ்வின் படைத்த சாதனையை 10 ஆண்டுகளுக்கு பிறகு முறியடித்துள்ளார் அர்ஷ்தீப் சிங். டி20 போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த பெருமையை பெற்றிருந்த அர்ஷதீப் சிங் இதே போட்டியில் மொத்தம் ஒன்பது ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இதன் மூலம் டி20 உலக கோப்பையில் இந்திய வீரரின் சிறந்த பந்துவீச்சாகவும் இது மாதிரி உள்ளது. இதற்கு முன்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியிருந்தது தான் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறந்த பதிவாக டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து வந்தது. அதனை தற்போது அர்ஷ்தீப் சிங் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.