கரூரில் ஒரு கிலோ உப்பு ரூ.22 ஆயிரத்திற்கு ஏலம்.. சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில் நடந்த அதிசயம்

By Keerthana

Published:

கரூர்: ஆடிக்கிருத்திகையான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கரூரில் இருந்து பால்காவடி, தீர்த்தக்காவடி எடுத்துச்சென்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட உப்பு, ஒரு கிலோ ரூ,22 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

ஆடிக் கிருத்திகை என்பது ஜூலை 29ம் தேதியான இன்று பகல் 02.41 மணிக்கு துவங்கி, ஜூலை 30ம் தேதி பகல் 01.40 வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. பொதுவாக கிருத்திகை விரதத்தை பரணியில் துவங்கி, கிருத்திகையில் நிறைவு செய்வது தான் வழக்கம் என்பதால் இன்றைய நாள் சிறப்பான நாள் ஆகும்.

ஆடிக்கிருத்திகையான முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

கரூர் தத்தகிரி ஆடிக்கிருத்திகை பாதயாத்திரை குழு சார்பில் ஆண்டுதோறும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள தத்தகிரி முருகன் கோவிலில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை நிகழ்ச்சிக்கு கரூரில் இருந்து பால்காவடி, தீர்த்தக்காவடி எடுத்துச்சென்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வது வழக்கம் ஆகும்.

அதன்படி இந்த ஆண்டு தத்தகிரி முருகன் கோவிலில் நாளை ஆடிக்கிருத்திகை விழா நடைபெறுகிறது. கரூர் தத்தகிரி ஆடிக்கிருத்திகை பாதயாத்திரை குழுவினர் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று அதிகாலை மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்கள். அப்போது காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு கரூர் நகரத்தார் மண்டபத்திற்கு கொண்டு வந்தார்கள்.

அதன் பின்னர் அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த தீர்த்தக்காவடி, பால்காவடிக்கும், முருகப்பெருமானின் வேலுக்கும் திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளி வேலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பூஜைக்கு கொண்டுவரப்பட்ட மங்களப்பொருட்கள் ஏலம் விடப்பட்டது. ஏலத்தை மேலைபழனியப்பன் நடத்தினார்கள்.

இதில் ஒரு கிலோ உப்பு ரூ,22,000-க்கும், ஒரு கிலோ சர்க்கரை, கற்கண்டு, தேங்காய், மஞ்சள் ஆகியவை ரூ,7,000-க்கும் ஏலம் போனது. இதையடுத்து பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.