அரசியல்ல பரம எதிரி.. தொழில்ல செம போட்டி.. ஆனாலும் இணைபிரியாத இரு ஆளுமைகள்!

எம்.ஜி.ஆர் – சிவாஜி கணேசன் இந்த இரண்டு வார்த்தைகளும் தமிழ் சினிமாவின் மிக சக்தி வாய்ந்த பெயர்கள். இருவரும் பயணித்தது ஒரே குதிரையில்.. ஆனால் நோக்கம் வேறு.. ஒருவர் நடிப்பில் புலி.. இன்னொருவர் புரட்சியின் மன்னன். அரசியலில் இருவரும் பரம எதிரி.. ஆனாலும் இவர்களுக்குள் இருந்த நட்பு மட்டும் எப்போதும் வற்றாத நீரோடையாகவே இருந்தது.

எம்.ஜி.ஆர். – சிவாஜி கணேசன் நட்பு எவ்வளவு ஆழமானது என்பதை நடிகர் திலகமே தன்னுடைய சுய சரிதையில் கூறியது மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்நூலில், “பால்யப் பருவத்திலிருந்தே எம். ஜி. ஆரும் நானும் நெருங்கிய நண்பர்கள். என் வீட்டிற்கு அவர் வருவதும், அவர் வீட்டிற்கு நான் செல்வதும் என் தாயார் கையால் அவர் சாப்பிடுவதும், அவர் தாயார் கையால் நான் சாப்பிடுவதும் வழக்கமாக நடைபெறும் நிகழ்வு. எனது வீட்டுக்குப் பக்கத்தில்தான் எம். ஜி. ஆர் அவரது தாயார், சகோதரர் எம். ஜி. சக்ரபாணி ஆகியோர் குடியிருந்தனர். அப்போதுதான் எம். ஜி. ஆர். சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்கள்.

நானும் என்னுடைய நண்பர் காக்கா ராதாகிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். பெரும்பாலும் சாப்பாட்டு நேரத்தில் அங்கேயே இருப்போம். எம். ஜி. ஆர். ‘பசிக்கிறது’ என்றாலும், ‘இருப்பா கணேசன் வரட்டும்’ என்பார்கள் அவரது தாய். அந்த அளவுக்கு அவர்களுக்கு என்மேல் பாசம். எம். ஜி. ஆர். இரவு நேரத்தில் என்னையும், ராதாகிருஷ்ணனையும் டவுனுக்குப் பக்கத்திலுள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்கக் கூட்டிச் செல்வார். எல்லோருக்கும் அவர்தான் செலவு செய்வார். அதுபோல நீண்ட நாட்கள் இருந்தோம். பிறகு நான் காஞ்சிபுரம் சென்று அண்ணாவுடன் சேர்ந்துவிட்டேன்.

எம்ஜிஆருக்கு மதுவை ஊற்றிக் கொடுத்த இயக்குனர்! திறமையாக சமாளித்த மக்கள் திலகம்!

அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தில் முதலில் எம். ஜி. ஆர். நடிப்பதாக இருந்தது. அவர் என்ன காரணத்தினாலோ நடிக்கவில்லை. அண்ணா என்னைத் தேர்ந்தெடுத்தார். நான் நடித்தேன். மறுபடியும் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. சில வருடங்கள் கழித்து நான் சினிமாவில் சேரும்போது, எம். ஜி. ஆரைச் சந்தித்தேன். ஒரே காலகட்டத்தில் இருவரும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். அதேசமயத்தில் இருவரும் அரசியலிலும் ஈடுபட்டிருந்தோம்.

ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா? நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால், இருவருக்கும் ஒரே ரசிகர்கள்தான் இருப்பார்கள். நாங்கள் இருவரும் தனித்தனியே செயல்பட்டதால் அவருக்கு வேறு ரசிகர்கள், எனக்கு வேறு ரசிகர்கள் இருந்தார்கள். என்னை அவர் விமர்சிப்பார். அவரை நான் விமர்சிப்பேன். அது அரசியல் பற்றித்தான் பெர்சனலாக ஒன்றுமில்லை. பலர் இதை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் விரோதிகள் என்று பேசிக்கொண்டார்கள். அதைப் பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை.

பல வருடங்கள் சென்ற பின் அவர் முதல் மந்திரியானார். அவர் பதவியிலிருந்த போது, பல முறை நான் சந்தித்திருக்கிறேன். எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு என்றும் மாறவில்லை.
என்னுடைய தோட்டம் எம். ஜி. ஆரின் தோட்டத்திற்கு பக்கத்திலேயே இருக்கிறது. என் தாயார் மறைந்த பிறகு அவர்கள் நினைவாக என் தோட்டத்தில் என் தாயாரின் உருவச்சிலையைத் திறப்பதற்கு வரவேண்டுமென்று எம். ஜி. ஆரிடம் கூற உடனே ஒத்துக்கொண்டு, தன் மனைவியுடன் வந்து எனது தாயார் சிலையைத் திறந்து வைத்தார்.

ஜெய்சங்கரை புகழ்ந்து தள்ளிய ஜெயலலிதா! இருவருக்கும் இடையே இப்படி ஒரு நட்புறவா?

தனது தாயைப்போல் கருதிய என் அம்மாவின் உருவச் சிலையைத் திறந்துவைத்ததில் அவர் மகிழ்ச்சியடைந்தார். இதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. தஞ்சாவூரில் எனக்கு சாந்தி கமலா என்றொரு தியேட்டர் இருந்தது. இப்போது இல்லை. அந்த தியேட்டர் திறப்பு விழாவின் போதும் ‘நானே வந்து திறக்கிறேன்’ என்று சொல்லியனுப்பினார். தஞ்சாவூர் வந்து அந்தத் தியேட்டரைத் திறந்தார். எனக்கும் அவருக்கும் நட்பும், உறவும் இல்லையென்றால், இவையெல்லாம் நடந்திருக்குமா?“ என்று தனது சுயசரிதை நூலில எம்.ஜி.ஆருக்கும், தனக்கும் உள்ள நட்பு குறித்து விவரிக்கிறார் நடிகர் திலகம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.