2000 வருஷம் பழமையாம்.. கல்லறைக்குள் கிடைத்த பொருள்.. இன்னும் வாசனை மாறாம அப்படியே இருக்கு..

எப்போதுமே இந்த உலகத்தில் பழங்கால பொருட்கள் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்து விட்டால் அதற்கான மவுசே அதிகமாக இருக்கும். அந்த காலத்தில் மனிதர்கள் எல்லாம் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என நினைக்கும் போதே ஒரு வித ஆர்வம் மனதில் தூண்டி விடும் சூழலில், அந்த சமயத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பற்றிய தகவலை தெரிந்து கொண்டாலே நமக்கு ஒரு வித ஆச்சரியம் உருவாகும்.

இதனிடையே, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூட உலகை சுற்றியுள்ள பல இடங்களில் இப்படி நிறைய இடங்களை தோண்டி அதற்குள் புதைந்து கிடக்கும் நிறைய மர்மங்களை வெளியே கொண்டு வர முயற்சிப்பார்கள். தமிழ்நாட்டின் கீழடி பகுதியில் கூட நடந்த அகழ்வாராய்ச்சியில் பண்டைய காலத்து தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு கண்காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பல விதமான ஆராய்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

அப்படி ஒரு சூழலில், தற்போது 2000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் சில கிடைத்ததுடன் அதன் பின்னணி தான் தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ளது கார்மோனா என்னும் பகுதி உள்ளது. இங்கே நிறைய ரோமானிய கல்லறை உள்ள சூழலில் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த கல்லறை பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் அறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது. அப்போது ஒயின் அடங்கிய ஜாடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்புள்ள இந்த ஒயின், சீல் செய்யப்பட்டு ஜாடிக்குள் வைக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அந்த சமயத்தில் வேண்டப்பட்டவர்கள் இறந்தால் அவர்கள் விரும்பிய பொருட்களை கல்லறைக்குள் வைப்பதும் ஒரு வழக்கமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

2000 ஆண்டுகள் பழக்கமுள்ள அந்த ஒயின் குடிப்பதற்கு முடியாது என்றாலும் எந்த கசிவும் ஏற்படாத வகையில், சீல் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது. இந்த ஒயின் இன்னும் அப்படியே இருக்க, இத்துடன் தங்க மோதிரம் ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர். பானம் ஆவியாகாமல் தடுக்க, இப்படி ஜாடிக்குள் மதுவை அடக்கி வைக்கும் பாரம்பரியம் அப்போது இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

ஒயின் மற்றும் தங்க மோதிரம் தவிர கண்ணாடி பொருட்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல கலை பொருட்கள் தொடர்பான விஷயங்களும் இந்த கல்லறையை பற்றிய ஆராய்ச்சியில் கிடைத்துள்ளது. இதில் மற்றொரு சிறப்பம்சமாக அதில் இருந்த வாசனை திரவியம் இன்னும் மணமாகவே இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டில் நடந்த இந்த ஆராய்ச்சி தற்போது உலக அளவில் பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.