பாம்புகள் பழி வாங்குமா? ஒரே மாதத்தில் 5 முறை கடி வாங்கிய இளைஞர்.. அதெப்படி திமிங்கலம்

டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூரில் விகாஸ் துபே நபரை ஒரே பாம்பு ஒரு மாதத்தில் 5 முறை கடித்துள்ளது. அதெப்படி திமிங்கலம் என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் புரிகிறது. இதை பாருங்கள்.

உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூரில் விகாஸ் துபே என்ற இளைஞரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. ஆனால் அதில் இருந்து மீண்ட அவர் பாம்பு பயத்தில் வெவ்வேறு உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கும் அவர் பாம்பு கடிகளுக்கு ஆளாகியதாகசொல்கிறார்கள்.ஒரே மாதத்தில் ஐந்து முறை பாம்புக்கடிக்கு ஆளாகி உள்ளதாக சொல்கிறார்கள். இது பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையா என அறிவியலாளர்களே திகைத்து போய் பார்த்துள்ளார்கள். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான ஆராய்ச்சி முடிவினை பார்ப்போம்.

தற்போதைய நிலையில் பலர் வியூஸ் வர வேண்டும் என்பதற்காகவும், சமூக வலைதள பக்கங்களுக்கு லைக், கமென்டுகள் அதிகம் வர வேண்டும் என்பதற்காகவும் பாம்புகளைப் பிடித்து வீடியோ எடுத்து போடுகிறார்கள். பாம்புகள் என்றாலே பலருக்கும் இன்றும் பயம் தான். பாம்பு குறித்த பழைய படங்கள் எல்லாம் இன்றும் பலருக்கு பீதியை கிளப்பும். பாம்பு கடியால் இறந்தவர்கள் அந்த காலம் முதல் இந்த காலம் வரை மிக அதிகம். நாகப்பாம்பு, கருநாகம், சுருட்டை, கட்டு விரியன், கண்ணாடி விரியன் போன்ற பாம்புகளே நமது ஊர் பக்கம் அதிகமாக இருக்கும் விஷபாம்பு வகைகள் ஆகும். இதில் நாகப்பாம்பு வயல்வெளிகளில் அதிகம் நடமாடும் என்பதால் அதுகுறித்த அச்சம் அந்த காலம் முதலே இருக்கிறது.

அதனால் தான் பழைய படங்களில் ஒரு ஜோடி பாம்புகளில் ஒன்று கொல்லப்பட்டால், மற்றொன்று கொலையாளியைக் கண்டுபிடித்து பழிவாங்குவதாகக் காட்டப்படும். தமிழில் கமல்ஹாசன் நடித்த நீயா படத்தில் ஆரம்பித்து, கடைசியாக வெளியான நாகினி சீரியல் வரை இப்படித்தான் உள்ளது. பாம்பின் கண்ணில் உள்ள படத்தைப் பார்த்து பாம்பு கொலைகாரனைக் கண்டுபிடித்ததாக சொல்வார்கள். ஆனால் அறிவியல் ஆய்வுகளின் படி இந்த கூற்றில் எந்த உண்மையும் இல்லை.

அறிவியலின் படி, டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் படி, பாம்புகள் பழிவாங்கும் என்ற இந்தக் கூற்றுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. பாம்புகள் பழிவாங்கும் அல்லது பழிவாங்கும் குணம் உடையவை இல்லை. உண்மையில், பாம்பின் மூளை எதையும் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ச்சியில்லாதவை. கண்ணில் புகைப்படம் தெரிகிறது என்பது எல்லாம் கட்டுக்கதை.

பொதுவாக பாம்பை கொன்றால் அதன் ஆசனவாயில் இருந்து ஒருவித ரசாயனம் வெளியேறுகிறதாம். அப்படிப்பட்ட நிலையில், அருகில் பாம்பு இருந்தால், அந்த ரசாயனத்தின் வாசனையால் அது ஈர்க்கப்பட்டிருக்கும் என்றும் அதனால் அது பழிவாங்குவதற்காக வந்ததாக அர்த்தம் இல்லை என்கிறார்கள்.

அதாவது இன்னும் தெளிவாக சொல்வது என்றால், பாம்புகளுக்கான இனப்பெருக்க காலத்தில் ஒரு வித திரவத்தை கசிய விட்டுக்கொண்டே இருக்குமாம். அதை கண்டு துணையைத் தேடி மற்றொரு பாம்பு வருமாம். தன்னுடைய உடலில் இருந்த இனப்பெருக்க திரவத்தை எங்கே அடித்தோமோ அங்கேயே கசிய விட்டுவிடும். இந்த வாசம் மற்றொரு பாம்புக்குச் சென்று, அந்தப் பாம்பு அங்கே வருகிறதாம். இதை பழிவாங்க பாம்பு வருகிறது என நினைத்துக் கொள்கிறோம் என்கிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் விகாஸ் துபேவை ஒரு மாதத்திற்குள் 5 முறை பாம்பு கடித்தது தற்செயல் நிகழ்வு என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். மழை நாட்களில், பாம்புகள் இரையைத் தேடி வெளியேறி வருகின்றன.அப்படித்தான் எதிர்பாராதவிதமாக கடித்திருக்கலாம் என்கிறார்கள். இப்போது மலைக்காலம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.