புதிய தொழில் மற்றும் ஏற்கனவே தொழில் செய்றீங்களா.. தமிழக அரசு தரும் அற்புதமான சான்ஸ்

கோவை: அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் வரை மானியம் கிடைக்கும் இந்த திட்டம் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கூறிய தகவல்களைபார்ப்போம்

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்ட அறிவிப்பில்: பட்டியலினத்தவர், பழங்குடியினர் விவசாயம், அரசு வேலை, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தல் என்ற அளவிலேயே தொழில்முனைவோர்களாக இருப்பதை மாற்றி, பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்க அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது

அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் மானியமாகவும், 6 சதவீதம் வட்டி மானியமாகவும் வழங்கப்படும். பட்டியலின, பழங்குடி இனத்தவர்கள் புதிய மற்றும் ஏற்கனவே தொழில் செய்பவர்கள் தொழிலினை விரிவாக்கம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் விண்ணப்பதாரர் சொந்த முதலீட்டை தவிர்க்கும் வகையில் தகுதியானவர்களுக்கு முன்முனை மானியம் வழங்கப்படும். இதன்மூலம் நேரடி விவசாயம் தவிர்த்து அனைத்து வகையான உற்பத்தி, சேவை, வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்க லாம். புதிய தொழில் முனைவோர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 55 ஆகும். கல்வி தகுதியே தேவையில்லை. தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது

அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பயன் பெற திட்ட அறிக்கை, ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற தளத்தில் இணையவழியாக விண்ணப் பிக்கலாம். மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவின் மூலம் விண்ணப் பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. கடன் பெறுவது தொடர்பாக நிதி நிறுவனங்களுடன் இணைப்பு பாலமாக கோவை மாவட்ட தொழில் மையம் விளங்குகிறது.

கோவை மாவட்ட தொழில் மையம் மூலம் கடந்த ஆண்டு அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் 55 பேருக்கு ரூ.6.79 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டு களில் புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 213 பேருக்கு ரூ.27 கோடியே 92 லட்சம் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 284 பேருக்கு ரூ.3 கோடியே 20 லட்சம் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 375 பேருக்கு ரூ.11 கோடியே 79 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மாவட்ட தொழில் மையம் சார்பில் சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் மூலம் மொத்தம் 927 பேருக்கு ரூ.49 கோடியே 70 லட்சம் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டு உள்ளது” இவ்வாறு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கூறினார்.