மத்திய இணையமைச்சர் ஷோபாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

சென்னை: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாட்டை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணையமைச்ர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையானது. இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஷோபா சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசியதற்கு நான் ஏற்கனவே வருத்தம் தெரிவித்திருக்கிறேன். இப்பேச்சு தொடர்பாக பெங்களூர் சிக்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கிற்கு கர்நாடக ஐகோர்ட் அதற்கு தடையும் பிறப்பித்துள்ளது.

அதே பேச்சுக்கு மதுரையிலும் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கருதுகிறேன். ராமேஸ்வரம் கஃபே வழக்கில் கைதான நபர் சென்னையில் தங்கியிருந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ சென்னையில் சோதனை நடத்தி இருந்தது.

தமிழர்களை நான் அவதூறாக பேசவில்லை. எனவே, மதுரை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்றார் . இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.ஹரிபிரசாத் ஆஜராகி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்..

இதனையடுத்து, போலீஸ் சார்பில் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை 12) ஒத்தி வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். அவ்வாறு ஒத்திவைப்பதாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்,

ஆனால் இடைக்கால நிவாரணம் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன், குண்டு வைத்தவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி எடுத்தது முன்னதாகவே தனக்கு தெரிந்திருக்கும் பட்சத்தில் பொறுப்பான குடிமகன் என்ற முறையில் முன்கூட்டியே காவல்துறைக்கு தகவல் அளித்திருக்க வேண்டுமென கூறினார். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை 12) நீதிபதி ஒத்திவைத்தார்.