Guna movie | குணா திரைப்படத்தை மறு வெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்

By Keerthana

Published:

சென்னை: சந்தான பாரதி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், 1991ம் ஆண்டு வெளியான குணா படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் மறு வெளியீடு செய்ய பட தயாரிப்பு நிறுவனமான பிரமிட் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா. சந்தான பாரதி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், ரேகா, ரோஷினி, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு முதலில் மதிகெட்டான் சோலை எனும் பெயர் வைக்க முடிவு செய்தார்கள்.ஆனால் பின்னர் குணா என்ற பெயர் வைத்தார்கள். கொடைக்கானல் மலை காடுகளில் படமாக்கப்பட்ட குணா, டேவில் கிச்சன்என்ற குகையில் அதிக காட்சிகள் எடுக்கப்பட்டது. இன்றைக்கு அந்த இடம் குணா குகை என்றே அழைக்கப்படுகிறது

சமீபத்தில் மலையாளத்தில் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் படம் வெளியான பின், நடிகர் கமல் நடித்த குணா படம் மறு வெளியீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. குணா படத்தை தியேட்டரில் மறுபடியும் காணபலரும் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில். குணா படத்தை மறு வெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கும் நிரந்தர தடை விதிக்கக் கோரினார்.

மேலும் படத்தின் முழு உரிமைதாரராக தன்னை அறிவிக்க வேண்டும் எனவும், படத்தை மறு வெளியீடு செய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தை தெரிவித்து, அத்தொகையை தனக்கு வழங்கும்படி, பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல் முருகன், குணா படத்தை மறுவெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்து, மனுவுக்கு ஜூலை 22ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.