நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும்.. கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்.. எக்ஸ் தளத்தில் வைரமுத்து பதிவிட்ட இரங்கல்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராயச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியின், எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணத் தொகையை அளித்தனர்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகவும், காவல்துறைக்கும், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிற்கு எதிராகவும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, நா. த. க. சீமான், தவெக தலைவர் விஜய், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும், அதேபோன்று திரைப்பிரபலங்களும் தங்களது கண்டத்தையும், உயிரழந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி: தமிழக அரசு, காவல்துறையின் அலட்சியப் போக்கே காரணம் : பா.ரஞ்சித்

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் இரங்கற்பா ஒன்றை எழுதியுள்ளார். அதில் நல்ல சாராயத்தைக் குறைத்து, கள்ளச் சாராயத்தை ஒழித்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கற்பா,

எந்தத் தேன் உணவானதோ
அதே தேனில் எறும்பும்

எந்தத் தண்ணீரில் மலரானதோ
அதே தண்ணீரில் தாமரையும்

எந்த நதியில் உயிர்கொண்டதோ
அதே நதியில் மீனினமும்

செத்து மிதப்பது
தெரிந்த பின்னும்

எந்த மது
மறக்கச்செய்கிறதோ
அதே மதுதான்
மரிக்கச்செய்கிறது என்பதனை
மறந்தனயே மனிதா!

நல்ல சாராயம்
குறைக்கப்பட வேண்டும்
கள்ளச் சாராயம்
ஒழிக்கப்பட வேண்டும்

இறப்பின் காரணம்
எதுவாயினும்
இரங்கத்தான் வேண்டும்
சாராயச்
சாவுகளுக்காகவல்ல;
சந்ததிகளுக்காக

இவ்வாறு அந்த இரங்கற்பாவினை இயற்றியிருக்கிறார் வைரமுத்து.