கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 இலட்சம்.. சிகிச்சை பெறுவோருக்கு 50 ஆயிரம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மணிக்கு மணி பலியின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்ட சூழ்நிலையில் சுமார் 39 பேர் பலியானது ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்னதான் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மதுவிலக்கு அமலாக்கத் துறையின் செயல்பாடுகள் இருந்தாலும் சில நேரங்களில் அவர்களையும் மீறி இதுபோன்றதொரு குற்றங்கள் நடைபெற்று சமுதாயத்தில் பேரிழப்பை ஏற்படுத்துகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் இச்சம்பவம் குறித்து தனது அழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன் அமைச்சர்கள் குழுவை கள்ளக்குறிச்சி அனுப்பி சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து கள நிலவரத்தை அறிந்து கொண்டார். இந்நிலையில் தனது எக்ஸ் தள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச்சாரயச் சம்பவம் – தமிழக அரசுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும். என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று. எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் அத்தனையையும் கண்காணித்து வருகிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.

மேலும் இன்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், சிகிச்சை பெற்று வருவோருக்கும் நிதியுதவி அறிவித்துள்ளார். அதில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 இலட்சமும், சிகிச்சை பெறுவோருக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அளித்திட ஆணையிட்டுள்ளார். இதுமட்டுமன்றி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திடவும் உத்தரவிட்டுள்ளார்.